Thursday, December 24, 2015

உப்பு கருவாடு திரை விமர்சனம்





நீண்ட நாட்கள் கழித்து ஒரு படத்தை பார்க்க நேர்ந்தது. பொதுவாக இப்பொழுதெல்லாம் படம் பார்ப்பதற்கு நேரம் அமைவதில்லை. ஆனால் திரைப்படங்களின் விமர்சனத்தை மட்டும் படித்து விடுவேன். இந்த படத்தின் விமர்சனத்தை படிக்கும் போது தான் தெரிந்தது, இந்த படத்தின் முக்கிய கருவும், நான் எழுதி மேடையேற்றிய இந்த நாடகத்தின் கருவும் 


ஏறத்தாழ ஒன்று தான் என்று. அதனாலேயே இந்த படத்தை பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது.  




சரி, இனி இந்த படத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்.

கருணாகரன் தான் இந்த படத்தின் நாயகன். இயக்கிய முதல் படம் படு தோல்வி, இரண்டாவது படம் பாதியில் நின்று போனது. மீண்டும் ஒரு வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருப்பவர். இதில் தங்கையின் கல்யாணத்துக்காக பணத்தேவை வேறு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நண்பர் மயில்சாமி மூலமாக நிபந்தனையுடன் ஒரு படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் மீனவ குப்பத்தைச் சேர்ந்த தாதா மற்றும் மீன் வியாபாரியுமான எம்.எஸ்.பாஸ்கர். கருணாகரனுக்கு சாம்ஸ் மற்றும் நாராயணன் இணை மற்றும் உதவி இயக்குனர்கள். தான் எடுக்கப்போகும் படத்துக்கு கதாநாயகனாக சதிஷ் மற்றும் நாயகியாக தன் தோழி ரஷிதாவையும் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் கருணாகரன். தயாரிப்பாளரின் அந்த ஒரு நிபந்தனை என்னவென்றால் தன் மகள் தான்  (நந்திதா) கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது தான். வேறு வழியில்லாமல் அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு அந்த மீனவ குப்பத்துக்கு தன் நண்பர்களோடு செல்கிறார். அங்கு படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு படம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒத்திகை பார்க்கலாம் என்று எண்ணி கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் பயிற்சி கொடுக்கிறார். நடிப்பா அப்படின்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் நந்திதாவை வைத்து வெற்றிக்கரமாக பயிற்சியை எல்லாம் முடித்து, சாமியாரிடம் (திண்டுகல் சரவணனிடம்) நல்ல நாள் கேட்டு, படப்பிடிப்பை ஆரம்பிக்கிற தினத்தில்  ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு கருணாகரன் அந்த படத்தை எடுத்தாரா இல்லையா என்பதை நகைச்சுவையோடு சொல்வது தான் இந்த உப்பு கருவாடு படம்.  


பொதுவாக ராதா மோகன் படம் என்றால் தயங்காமல் குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற ஒரு எண்ணம் இருக்கும். அந்த எண்ணம் இந்த படத்திலும் நிறைவேறியிருக்கிறது. இதில் கருணாகரன் தான் கதாநாயகன் என்றாலும், அனைத்து கதாப்பதிரங்களுக்கும் பெயர் கிடைக்கும்படியாக அமைத்திருப்பதன் மூலம் எல்லோருமே இதில் நாயகர்கள் தான். பொன் பார்த்திபனின்  வசனங்கள் இப்படத்தின்  முதுகெலும்பு. இதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் திரைப்படத்துறையில் நடக்கும் திரைமறைவு காட்சிகளாக நம் கண் முன்னே தெரியும். 

நகைச்சுவை நடிகரான கருணாகரன் மிகவும் சீரியஸ் கதாப்பத்திரத்தில் இதில் தோன்றியிருக்கிறார். நன்றாக நடிக்கக்கூடிய நந்திதா, நடிக்கவே தெரியாத மாதிரி நடித்திருப்பது அருமை. அவர் ஒரு காட்சியில் தன் தாயிடம், “நான் நல்லா நடிச்சேன்னா, நீ ரொம்ப அதிகமா நடிக்கிறன்னு சொல்றாரு. சரி, கொஞ்சமா நடிச்சா, இன்னும் நல்லா நடிக்கணும்னு சொல்றாரு. நான் எப்படித்தான்மா நடிக்கிறதுன்னு” புலம்புவது ஒரு புதுமுக நாயகி இயக்குனரிடம் படும் பாட்டை காட்டுகிறது. 




கருணாகரனின் தோழியாக வரும் “சரவணன் மீனாட்சி” புகழ் ரஷிதா அழகவும் இருக்கிறார் நன்றாகவும் நடித்திருக்கிறார். அதிலும் நந்திதாவிற்கு அவர் நடிப்பு சொல்லித்தரும் காட்சி, ஒரு பனை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எதற்கு எடுத்தாலும் சகுனம் பார்க்கும் கதாப்பாத்திரமாக மயில்சாமி எந்த ஒரு சத்தம் கேட்டாலும் மணி அடிக்குதுது பார் என்று கலகலப்பூட்டுவதும் , சாமியாராக வரும் திண்டுக்கல் சரவணன் தானும் நடிக்க வேண்டும் என்பதற்காக தனியறையில் மற்ற நடிகர்கள் மாதிரி பேசி பயிற்சி எடுப்பது,அதிலும் குறிப்பாக மேஜர். சுந்தர்ராஜன் மாதிரி வசனம் பேசுவது அருமை. எல்லோரையும் விட, டவுட் செந்திலின் முக பாவனைகள், மற்றும் தப்புத்தப்பாக ஆங்கிலத்தை உச்சரிப்பதும் கண்டிப்பாக நம் வயிற்றை புண்ணாக்கும். உதாரணத்துக்கு “bet” என்பதற்கு “bed” என்று சொல்வதும்,encouragement” என்பதற்கு “engagement” என்று சொல்வதும், “பின்னாடி தட்டுனவுடனே அவள் confuse ஆயிடுவா சார் என்று சொல்வதற்கு பதில் conceive ஆயிடுவா சார்” என்று சொல்லும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. மேலும் அந்த மலையாளப்பாடகரிடம் அவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள் சிரிப்போ சிரிப்பு. அந்த மலையாளப் பாடகர் வரும் போதெல்லாம் ஓவியாவும், இனியாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது போக எம்.எஸ்.பாஸ்கர் கவிதை சொல்கிறேன் பேர்வழி என்று சொல்லும் கவிதைகள் கூட வெடிச் சிரிப்புகள் தான். 




இப்படி படம் முழுக்க நகைச்சுவையோடு சொல்லியிருந்தாலும், தான் சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாகவும் அழகாவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். கண்டிப்பாக குடும்பத்தோடு இந்த படத்தை சிரிச்சு ரசிச்சு பார்க்கலாம். 

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகவே நீக்கி விட்டேன்.

      Delete
  2. பரவாயில்லை செலவு இல்லாமல் உப்பு கருவாடு தின்று விட்டேன் மிதமான உப்புடன் நன்றாகவே இருந்தது

    ஓவியாவும், இனியாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் ஏன் மணிகண்டன் சிரிக்க வில்லையா ?
    இணைப்பு பெரிய பதிவாக இருக்கின்றது பிறகு செல்கிறேன்

    ReplyDelete
  3. சொக்கன் சகோ!!! ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன். இந்த படத்தை பார்க்கதூண்டுகிறது விமர்சனம். மிக்க நன்றி அண்ணா!

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம்
    நன்றி நண்பரே
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  5. திரைப்பட விமர்சனம் வெகு ஜோர் நண்பரே!
    நேர்த்தியான விமர்சனம்.
    உப்புக் கருவாடு அனைவரும் போட வேண்டிய படம்தான்
    மன்னிக்கவும் பார்க்க வேண்டிய படம்தான்.

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. இந்த திரைப்படம் பற்றிய தங்களின் திறனாய்வு இந்த படத்தை பார்க்கத் தூண்டுகிறது. அதற்கு நன்றி!

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம் ...

    நாங்களும் பசங்களுடன் பார்க்க முயற்சிக்கிறோம் ..

    ReplyDelete
  8. நானும் பார்த்து ரசித்தேன்...
    அருமையான படம்...

    ReplyDelete
  9. பார்த்துட வேண்டியதுதான்...உங்கள் விமர்சனமும் சொல்லிவிட்டது, படம் ராதாமோகன் படம் என்பதாலும் ...

    ReplyDelete
  10. ஒத்த ரசனை என்பதால்,,,,,,

    நல்ல விமர்சனம், பார்க்கனும்

    ReplyDelete