Thursday, December 10, 2015

எங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்



சரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்), மீண்டும் வலைப்பூ உலகத்திற்குள் நுழைகிறேன். வலைப்பூ நண்பர்களும் எப்பொழுது நீங்கள் வனவாசத்தை முடித்து வலைப்பூவிற்குள் வருவீர்கள் என்று கேட்டு கேட்டு சலித்து விட்டார்கள். அவர்களின் பொறுமைக்கும், என்னை ஊக்குவித்து மீண்டும் எழுத தூண்டியதற்கும் முதலில் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஜூன் மாதம் 15ஆம் தேதி இரவு (ஆங்கில தேதிப்படி – 16ஆம் தேதி), எங்கள் வீட்டிற்கு புதிய வரவாக மணிகண்டன் பிறந்தார். அவரும் தன் இரு அக்காக்களைப் போல், எங்களை சீக்கிரம் பார்க்காமல் இருக்க முடியாததால் மருத்துவர்கள் சொன்ன தேதிக்கு (ஜூலை 10ஆம் தேதி) முன்பாகவே வந்துவிட்டார்.

முதல் இரு குழந்தைகளுக்குமே நாங்கள் அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே என்ன குழந்தை என்று பார்க்கவில்லை. அதுபோல் இவர் வயிற்றில் இருக்கும்போதும், நாங்கள் என்ன குழந்தை என்று பார்க்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் என்ன குழந்தை என்று பார்த்து விட்டீர்களா, பெயரை தெரிவு செய்துவிட்டீர்களா என்று கேட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் அடுத்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறோம் என்ற ஆவல். எங்களைப் பொறுத்த வரையில் ஆண் குழந்தை என்றால் “மணிகண்டன்” என்று பல வருடங்களுக்கு முன்பாகவே பெயரை தேர்வு செய்துவிட்டோம். அதற்கு காரணம், எங்களுக்க் திருமணமாகி பல வருடங்கள் குழந்தை பிறக்காததால், எங்கள் வீட்டிலும் சரி, அம்மணியின் வீட்டிலும் சரி, மகன் பிறந்தால் மணிகண்டன் என்று தான் பெயர் சூட்ட வேண்டும் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதனால், முதல் முறை அம்மணி கரு கொண்டபொழுது, பெண் குழந்தை பிறந்தால் அழகான தமிழ் பெயராக வைக்க வேண்டுமே என்று யோசித்து, யோசித்து, பத்து வருடங்கள் கழித்து ஓவியமாக பிறப்பதால், “ஓவியா” என்று பெயர் சூட்டினோம். அடுத்த குழந்தைக்கும், பெண் குழந்தை என்றால் என்ன பெயர் வைப்பது என்று யோசித்து, “இனியா” என்று பெயர் சூட்டினோம். இந்த முறையும் பெண் குழந்தையாக இருந்தால், இரண்டு பெயரை தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால் ஐயப்பனோ, பல வருடங்களாக நீங்கள் என்னுடைய பெயரை தேர்வு செய்து வைத்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள், இனியும் உங்களை ஏமாற்றாமல் மணிகண்டனாக வந்து விடுகிறேன் என்று வந்து விட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு நண்பரின் மனைவி, நீங்கள் உங்கள் மகனுக்கு “ஆர்யா” என்றோ “சூர்யா” என்றோ பெயர் வைப்பீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன் என்று கூறினார். அவரை மாதிரி, இன்னும் சிலரும், உங்களின் மூன்றாவது குழந்தைக்கு நீங்கள் என்ன பெயர் வைப்பீர்கள் என்று எதிர்ப்பார்த்தோம் என்று கூறினார்கள். ஓவியா, இனியா என்று நாங்கள் வைத்த பெயர், மூன்றாவது குழந்தையின் பெயருக்கு எவ்வளவு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு என்று அப்பொழுது தான் தெரிந்தது.

ஜூன் மாதம் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு நான் அலுவலகம் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அப்பொழுது வீட்டு அம்மணி, இன்றைக்கு நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம், எனக்கு பணிக்குடம் உடைந்த மாதிரி தோன்றுகிறது என்று கூறினார்கள். ஓவியாவையும்,இனியாவையும் அவர்களின் ஆயாவிடம் விட்டு விட்டு (அவர்களும் நான் இனிமேல் இங்கு வரமாட்டேன் என்று சொல்லி,சொல்லி “பெத்த மனசு பித்து” என்பதற்கேற்ப மகளின் பிரசவ நேரத்தில் கூட இருப்பதற்காக வந்துவிட்டார்கள்). நான் அம்மணியை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையில் வண்டியை விட்டு இறங்கியவுடன், அம்மணி உட்கார்ந்திருந்த சீட் முழுவதும் ஈரமாகி, அவர்களின் உடையும் ஈரமாகி இருந்தது. அப்பொழுதே தெரிந்து விட்டது, பணிக்குடம் உடைந்து விட்டது என்று. மருத்துவமனைக்குள் சென்ற பொழுது, இனியாவை பிரசவம் பார்த்த செவிலித்தாய் (mid-wife - செவிலித்தாய் சரியான அர்த்தம் என்று தான் நினைக்கிறேன். தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும்), எதிரில் வந்தார்கள். அவர்களே அம்மணியை பரிசோதிப்பதற்கான அறையில் கொண்டு வந்து விட்டு, நானே இந்த குழந்தைக்கும் பிரசவம் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்கள். பிறகு மருத்துவர்கள் வந்து அம்மணியை பரிசோதித்துவிட்டு, முடிந்த வரை இன்னும் ஒரு வாரம் பொறுத்திருப்போம் (அப்பொழுது தான் 37 வாரங்கள் முடிந்து விடும்). அதற்குள் வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தால் பரவாயில்லை, இல்லையென்றால் ஒரு வாரம் முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று சொல்லி விட்டு சென்றார்கள். அம்மணியும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட் கிழமை என்று மருத்துவமனையிலேயே இருந்தார்கள். நாங்களும் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து இரவு சென்று விடுவோம். திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு, மருத்துவமணியில் இருந்து அம்மணி போன் செய்து, எனக்கு வலி நன்றாக எடுக்க ஆரம்பித்து விட்டது,அதனால் பிரசவ அறைக்குச் செல்கிறேன்,சீக்கிரம் வாருங்கள் என்று கூறினார். நாங்களும் உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். இரண்டு குழந்தைகளும் பிறக்கும்போது நான் தான் உடன் இருந்தேன். அதனால் மாமியாரிடம், நீங்கள் பிரசவ அறையில் அவள் கூட இருங்கள், நான் இவர்கள் இருவரையும் வைத்துக்கொண்டு வெளியில் இருக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர்களும், இல்லை,இல்லை, நீங்களே அவள் கூட இருங்கள் என்று கூறிவிட்டார்கள். பிறகு ஒரு வழியாக 1.50 மணி அளவில் அம்மணி மணிகண்டனை பிரசவித்தார்கள். இரு குழந்தைகளுக்கும் தொப்புள் கொடியை தூண்டித்ததைப் போல், இந்த குழந்தைக்கும் நானே தொப்புள் கொடியை துண்டித்தேன். இங்கு ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நம் நாட்டில் மருத்துவர்கள் தான் பிரசவம் பார்ப்பார்கள். ஆனால் இங்கு பொது மருத்துவமனைகளில் இயல்பான பிரசவம் என்றால், செவிலித்தாய் தான் பிரசவம் பார்ப்பார்கள். வயிற்றில் கத்தி வைக்க வேண்டும் என்றாலோ, மிகவும் பிரச்சனைக்குரிய பிரசவம் என்றாலோ தான் மருத்துவர்கள் வந்து பிரசவம் பார்ப்பார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு நான் வெளியே வந்து ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னவுடன், ஓவியாவும், இனியாவும் எங்களுக்கு தங்கச்சி பாப்பாத்தான் வேண்டும், தம்பி பாப்பா  வேண்டாம் என்று ஒரே அழுகை. ஓவியா இன்னும் ஒரு படி மேல போய், தங்கச்சி பாப்பாத்தான் வந்திருக்கும், நீங்கள் மாய மந்திரம் செய்து தம்பி பாப்பாவாக மாற்றி விட்டீர்கள் என்று ஒரே புலம்பல். அவர்கள் இருவரையும் ஒரு வழியாக சமாதானம் செய்து,குழந்தையை காண்பித்தோம். உடனே ஓவியா சமாதானமாகி விட்டார். இனியா முழுவதும் சமாதானம் அடையவில்லை. ரொம்ப நாளைக்கு இனியா அவரை தங்கச்சி பாப்பாத்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் அவர் செல்லும் day careல் எல்லாம் எங்கள் வீட்டிற்கு  தங்கச்சி பாப்பா வந்திருக்கு என்றும் சொல்லியிருக்கிறார். பிறகு நான் அவர்களிடம் எல்லாம் பெண் குழந்தை இல்லை ஆண் குழந்தை தான் பிறந்திருக்கு என்று புரிய வைத்தேன்.



இப்பொழுது தம்பி பாப்பா தான் அவர்கள் உலகம் . அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலையும், இவர்களும் அவரை மாதிரியே செய்து காட்டுவார்கள். 


அவர் அழுகும்பொழுது, நாங்கள் உடனே அவரைப் போய் பார்க்கவில்லையென்றால், ஓவியா எங்களிடம், உங்களுக்கு தம்பி மேல அக்கரையே இல்லை, உங்களுக்கு உங்கள் வேலை தான் முக்கியமாகி விட்டது என்று எங்களிடம் கோபித்துக்கொள்வார்.

இனி, முடிந்தவரை அடிக்கடி வலைப்பக்கம் வந்து நானும் உள்ளேன் ஐயா என்று எனது வருகையை தெரியப்படுத்தி விடுகிறேன். 

30 comments:

  1. தங்கள் குடும்பத்தின் புதிய வரவான செல்வன் மணிகண்டனுக்கு ஆசிகளும் வாழ்த்துக்களும்! பெருமைமிகு பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. முதலாக வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. குழந்தை மணிகண்டனுக்கு வாழ்த்துகள். குழந்தை பிறந்த மறுநாளே இந்த இனிய செய்தியை (17.06.2015 அன்று) என்னுடன் சாட் மூலம் பகிர்ந்துகொண்டீர்கள். இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.
      எனக்கும் நன்றாக நியாபகம் இருக்கிறது.

      Delete
  3. அடடா இது தான் விடயமா இத்தனை காலமும் மறைந்து இருந்ததற்கு ம்..ம் நல்ல விடயம். வாழ்த்துக்கள் ...! மணிகண்டன் வருகைக்கும் வலையில் தங்கள் மீள் வருகைக்கும் ஆக .... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களை மறுபடியும் காண.தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. இது தான் விடயமே. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  4. வணக்கம்,

    ஆஹா, மிக்க மகிழ்ச்சி. குட்டி தங்கத்திற்கு வாழ்த்துக்கள்.
    வாருங்கள் வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  5. இல்லத்தின் புது வரவுக்கு
    இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா.

      Delete
  6. நல்வரவு மணிகண்டனுக்கும் சேர்த்தே.... //ஸ்வீட் எடு கொண்டு//

    ஓவியாவும், இனியாவும் தங்கச்சி பாப்பா வேண்டும் என்று சொன்னதை நானும், வில்லங்கத்தாரும் நம்பிட்டோம்

    பழைய பாடல் ஒன்று நினைவு வந்தது

    //ஓடிப்பிடித்து விளையாட
    ஒரு தம்பிப் பாப்பா வேண்டும் விளையாட//

    இதுதான் அது

    அடுத்த மாளிகைபுரத்தமனுக்கு இப்பொழுதே வாழ்த்துகள்.

    வலையுலகத்துக்கு நீங்க அடுத்த மாதம் வந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் நிறை மாதம் எப்பூடி ?

    இருந்தாலும் இவ்வளவு சீக்கிரமாக மருமகன் மணிகண்டன் பிறந்த விசயத்தை சொல்வீங்கனு நினைக்கவில்லை.
    இருப்பினும் மீண்டு(ம்) வந்தமைக்கு வாழ்த்துகள்

    தொடரட்டும் எழுத்துப் பணி
    வாழ்க வளமுடன் ஐவர் அணி

    ReplyDelete
    Replies
    1. ஆமா, அது என்ன "//அடுத்த மாளிகைபுரத்தம்மனுக்கு இப்பொழுதே வாழ்த்துக்கள்//" - சாத்தியமா எனக்கு புரியலை.

      வீட்டிற்கு வந்த புதிய வரவை, இவ்வளவு சீக்கிரமா யாராவது சொல்லியிருக்காங்களா. எப்பவுமே நாம தனிச்சு தெரியனுமாக்கும் .

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஆமா அது யாரு ஐவர் அணி நண்பரே?

      Delete
    2. ஐயப்பனை தெரிஞ்சு வச்சு இருக்குற உங்களுக்கு மாளிகைபுரத்து அம்மனைத் தெரியலையா ?
      இப்ப வீட்டுல ஐந்து நபர் இல்லையா ? இப்படி விளக்கம் கொடுத்தே... எனது 3 ½ கிலோ மூளையும் கரைஞ்சிடும் போலயே.....

      Delete
  7. குட்டிப்பாப்பா மணிகண்டனுக்கு அன்பான வாழ்த்துக்கள். ஓவியாவுக்கும், இனியாவுக்கும் தம்பிபாப்பா வந்தமை ஒரே குதூகலம்தான்.உங்க எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
      ஆமாம், அவர்கள் இருவருக்கும் ஒரே குதூகலம் தான்.

      Delete
  8. மணிகண்டனுக்கு ஆசிகளும் உங்ளுக்கு எனது வாழ்த்துகளும்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்...
    தம்பியும் அக்காங்களும் அழகு....

    ReplyDelete
  10. மணிகண்டன்
    வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. புதிய வரவு. மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே.....

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சகோ ..

    ReplyDelete
  13. வாழ்த்துகள் சகோ, குட்டித்தம்பியும் அக்காக்களும் இனிய ஓவிய அழகு! :-)

    ReplyDelete
  14. வணக்கம்
    அண்ணா
    மகிழ்வான தகவலை பகிரந்துள்ளீர்கள் குடும்பத்தில் புது வரவு...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. மருமகனுக்கு வாழ்த்துகள். குட்டி பையன் அழகா இருக்கான். சுத்தி போடுங்க சகோ!!

    ReplyDelete
  16. ஆஹா.... குட்டிச் சுட்டி மணிகண்டனுக்கு எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. ம்ணி மணியடித்த போதே/பிறந்த அன்றே தங்களை வாழ்த்தியிருந்தாலும் இன்று மணிகண்டன் குட்டிப் பையனைப் பார்த்ததும் மிக்க மகிழ்வு. வாழ்த்துகள் மணிகண்டனுக்கும் தங்களுக்கும். குழந்தைக்கு எல்லா வல்ல இறைவன் எல்லா ஆசிகளையும் வழங்க பிரார்த்தனைகள். நாங்களும் ப்ரெசன்ட் உங்கள் தளத்தில்.

    ReplyDelete
  18. மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  19. வாங்க வாங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. தங்கள் குடும்பத்தில் அன்பின் புதுவரவுக்கும் அக்காக்களாகிவிட்ட குட்டீஸ் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. மறுபடியும் உங்களைக் காண்பதில் மணிகண்டனுடன் காண்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    முன்னோர் திருவினைகள் முற்ற மகவாகிப்
    பின்னோர் புகழப் பிறந்தனையோ? - கண்ணே!
    அணிகொண்ட பெற்றோர்க் கரசே! அறிவே!
    மணிகண்டா வாழ்க மலர்ந்து!

    எல்லா வளமும் நலமும் பெற்றுத் தங்கள் குலத்தோன்றல் மணிகண்டன் வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  22. உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமை அருமை.
    அக்காக்களுக்கும் குட்டித்தம்பிக்கும் ஆசிகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete