Wednesday, September 24, 2014

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - சைவ மாநாட்டில் மேடையேற்றிய நாடகம் - இறுதி பகுதி



 
 
 
 
காட்சி – 5

இடம் – அன்னத்தின் இல்லம்

காட்சியமைப்பு – தனபதியும், சுசிலையும் அங்கு வருகிறார்கள்

அன்னம் – வாருங்கள் அண்ணன். வாருங்கள் அண்ணியாரே.

தனபதி – எம்முடைய சொத்தெல்லாம் உன்னுடைய புதல்வனே கட்டிக்காக்கட்டும், நாங்கள் கானகத்துக்கு செல்கிறோம்.

அன்னம் – என்னை மன்னித்து அருளுங்கள் அண்ணா. அடியேன் சொல் அம்புகளின் மூலம் தங்களின் மனதை ரணப்படுத்தி விட்டேன். தாங்கள் எங்கும் செல்ல வேண்டாம். தயவு கூர்ந்து, இந்த சிறியவளின் தவறை மன்னியுங்கள். (காலில் விழுந்து வணங்குகிறாள்).

தனபதி – எழுந்திரு அன்னம். யாம் உம் மீது வருத்தம் கொள்ள வில்லை. அடுத்த பிறவியிலையாவது எங்களுக்கு குழந்தை செல்வத்தை அந்த சுந்தரேசன் தந்தருள வேண்டும் என்பதற்காக, கானகத்துக்கு சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ள இருக்கிறோம். எங்களை தடுக்காதே.

அன்னம் – தங்களை கானகத்துக்கு அனுப்பிவிட்டு, நான் என்ன செய்வேன் அண்ணா.

தனபதி – உன் புதல்வன் பெரியவனாக ஆகும் வரை, எம்முடைய சொத்துக்களை எல்லாம் கட்டிக்காத்து அவனிடம் அளித்துவிடு. நாங்கள் சென்று வருகிறோம்.
 
காட்சி – 6

இடம் – அன்னத்தின் இல்லம்

காட்சியமைப்பு – தனபதியின் பங்காளிகள் அங்கு வருகிறார்கள்

அன்னம் – வாருங்கள், வாருங்கள்

வானதி – நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா?

அன்னம் – என்ன கேள்விப்பட்டீர்கள்?

ராக்கம்மா – எங்கள் பங்காளி தனபதியின் சொத்தையெல்லாம், நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

அன்னம் – நானாக ஒன்றும் எடுக்கவில்லை. என் அண்ணன் என்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்.

வானதி – அது எங்களுக்கு எப்படி தெரியும் ?

ரக்காம்மா – அவரின் சொத்துக்கு நாங்களும் பாக்கியதாரர்கள் தான். தாங்கள் ஒருவர் மட்டுமே அந்த சொத்துக்களையெல்லாம் அனுபவிக்க முடியாது.

அன்னம் – அது எல்லாம் இல்லை. என் அண்ணன் என்னிடம் தான் ஒப்படைத்து விட்டு போயிருக்கிறார்.

ராக்கம்மா – ஓ! ஓ! அப்படியா, நாங்கள் இப்பொழுதே ஊர் தலைவரிடம் சென்று முறையிட்டு, அந்த சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, . உங்களை நடுத்தெருவில் நிற்க வைக்கிறோம்.

(இருவரும் போகிறார்கள்)

அன்னம் – சுந்தரேசா, இதென்ன சோதனை. அண்ணனின் மனம் புண்படும்படி பேசியதற்கு, எனக்கு நல்ல தண்டனை கிடைத்து விட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்.

(அப்போது ஒரு அசிரிரி குரல் ஒலிக்கிறது)

அசிரிரி – மகளே! நீர் ஊர் தலைவரின் முன்னிலையில் வழக்குத்தொடு, யாம் வந்து உம்மைக் காப்பாற்றுகிறோம்.

அன்னம் – ஈசனே, என்னுடைய அழுகுரல், உன் காதில் விழுந்து விட்டதா. மிக்க மகிழ்ச்சி. நான் இப்பொழுதே சென்று வழக்கு தொடுக்கிறேன்.
 


 

காட்சி – 7

இடம் – ஊர் தலைவரின் இல்லம்

காட்சியமைப்பு – தலைவர் முன்னிலையில் அன்னமும், தனபதியின் பங்காளிகளும் வழக்கு தொடர்கின்றனர்.

அன்னம் – ஐயா, என் அண்ணன் அவரின் சொத்துக்களையெல்லாம் என் மகனிடம் ஒப்படைத்து விட்டு தான் சென்றார்கள்.

ராக்கம்மா – ஐயா, இவர் பொய் உரைக்கிறார். தாக்கீது ஏதாவது இருந்தால் காட்ட சொல்லுங்கள்.

ஊர் தலைவர் – உன்னுடைய அண்ணன், அவ்வாறு நினைத்திருந்தால், அதற்கான தாக்கீதை தம்மிடம் கொடுத்திருப்பாரே. எங்கே அதை காட்டு பார்க்கலாம்.

அன்னம் – ஐயா, தாக்கீது எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் நான் உரைப்பது அனைத்தும் சத்தியமாகும்.

(அப்பொழுது, தனபதி அங்கு வருகிறார்)

அன்னம் – ஆ! என் அண்ணனே இங்கு வந்து விட்டார். அண்ணா, தக்க சமயத்தில் வந்து விட்டீர்கள். என்னை மன்னித்து இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுங்கள், (அவர் காலில் விழுகிறார்)

தனபதி – எம்முடைய சொத்துக்கள் அனைத்துமே யாம் சுவிகாரமாக்கிக்கொண்ட தங்கையின் மகனே கட்டிக்காக்க வேண்டும் என்று கூறிவிட்டு தான் நான் கானகத்துக்கு சென்றேன்.

ராக்கம்மா – (ஊர் தலைவரைப்பார்த்து), ஐயா இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. கானகத்துக்கு சென்றவரால் எவ்வாறு, வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக வர முடியும்?

ஊர் தலைவர் – ஆமாம், சிந்திக்க கூடிய கேள்வி. உண்மையில் இவர் தனபதியாக இருக்க முடியாது தான்.

வானதி – இவர் தனபதியே இல்லை. அவரைப் போலவே தோற்றம் கொண்ட வேறு எவரோ.

தனபதி – நான் தனபதி இல்லையென்றால், எனக்கு இங்கிருக்கிறவர்களை அடையாளம் தெரிந்திருக்காது. இதோ ஊர் தலைவர், இதோ இவர் என் பங்காளியின் புதல்வி ராக்கம்மா, இவர் என் மற்றொரு பங்காளியின் புதல்வி வானதி. என்ன யாம் சொல்வது சரி தானே.

ஊர் தலைவர் – ஐயா, எமக்கு தங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. தாங்கள் தனபதியாக தான் இருக்க வேண்டும். ரக்காம்மா, வானதி நீங்கள் இருவரும் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையென்றால், பொய் வழக்கு போட்டீர்கள் என்று கூறி அரசவையில் ஒப்படைக்கப்படுவீர்கள். பிறகு நீங்கள் கடும் தண்டனை அனுபவிப்பீர்கள்.

(அங்கிருந்து ராக்கம்மாவும்,வானதியும் சென்று விட்டார்கள்)

தனபதி – ஐயா தங்களின் முன்பாக எம்முடைய சொத்துக்கள் அனைத்தும் தங்கையின் மகனுக்கே சாசனம் செய்து விடுகிறேன்.

(தனபதி சென்று விட்டார். அப்பொழுது ஒரு அசிரிரி குரல் ஒலிக்கிறது)

அசிரிரி குரல் – ஊர் தலைவரே, எம்முடைய பக்தனின் தங்கைக்கு நேர இருந்த அதர்மத்தை தடுக்க யாமே தனபதியின் வடிவில் வந்து இந்த வழக்கை முடித்துக்கொடுத்தோம்.

ஊர் தலைவர்,அன்னம் மற்றும் மகன் அனைவரும் கீழே விழுந்து கும்பிடுகிறார்கள்)
 

காட்சி – 8

இடம் – சொக்கனின் வீடு

காட்சியமைப்பு – தாங்கள் பார்த்த நாடகத்தைப் பற்றி சொக்கணும் அவர் மனைவியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்)

சொக்கன் – திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை” என்று சொல்லுவார்கள். அது அப்படியே அந்த அன்னத்தின் விஷயத்திலும் நடந்திருக்கிறது அல்லவா.

கீதா – ஆமாங்க, அந்த அன்னத்தின் நிலமையில தாங்க நாமும் இருக்கிறோம். அந்த ஈசன் எந்த வழியிலாவது நமக்கு அருள் புரிய மாட்டானா!

(அப்போது வக்கீல் சபாபதி வருகிறார். சொக்கணும்,கீதாவும் வணக்கம் சொல்கிறார்கள். கீதா உள்ளே செல்கிறாள்)

சொக்கன் – வக்கீல் சார், கையெழுத்தை செக் பண்ணிட்டாங்களா? என் பங்காளி ஃப்ராட் வேலை தானே பண்ணியிருக்கான்.

சபா – ரெண்டு பேரு கிட்டேயும் இருக்கிற லெட்டர்ல உள்ள கையெழுத்து ஒண்ணு தான்னு ரிசல்ட் வந்திருக்கு .

சொக்கன் – அப்படி முடியவே முயாதே. எங்க அண்ணனோட கடைசிக்காலத்துல, அவருக்கு கேன்சர் வந்து படுத்த படுக்கையாக ஆயிட்டாரு. அப்ப இந்த பங்காளி வீட்டுல போய் கொஞ்ச நாள் இருக்கிறேன்னு சொல்லி போனாரு, ஆனா அவன் அவரை வீட்டுக்குள்ளேயே சேர்த்துக்கலை. அப்படி இருக்கும்போது, எப்படி அண்ணன் அவனுக்கும் அந்த மாதிரி எழுதி கொடுத்திருப்பாரு?

சபா – என்னன்னு தெரியலை சொக்கன். இப்ப ஜட்ஜ் தீர்ப்பை ஒரு வாரம் ஒத்திவச்சிருக்காரு.

சொக்கன் – நாங்க, அந்த ஆண்டவனை தான் நம்பிக்கிட்டு இருக்கிறோம் வக்கீல் சார்.

சபா – கண்டிப்பா அவன் உங்களை கை விட மாட்டான். சரி, நான் போயிட்டு வரேன்.

(ஒரு வாரம் கழித்து)

சொக்கன் – கீதா,கீதா, தீர்ப்பு நம்ம பக்கம் வந்துடுச்சு.

கீதா – என்னங்க சொல்றீங்க, உண்மையாகவா? ஆண்டவனே, கடைசில நல்ல தீர்ப்பா சொன்னதுக்கு உனக்கு ரொம்ப நன்றிப்பா.

சொக்கன் – ஜட்ஜ்,தீர்ப்பை வாசிக்கும்போது, பங்களியோட முகத்தை பார்க்கணுமே, அப்பப்பா, அவனுக்கு சொத்துல ஒண்ணும் இல்லைன்னு தெரிஞ்சவுடனே, கோபமா கிளம்பி போய்விட்டான்.

(அப்பொழுது வக்கீல் உள்ளே வருகிறார்)

கீதா – வாங்க வக்கீல் சார், கொஞ்ச நேரம் இருங்க பாயாசம் செஞ்சு கொண்டுக்கிட்டு வரேன்.

சபா – சொக்கன், நீங்க கும்பிட்ட கடவுள் உங்களை கை விடலை. இப்பத்தான் ஜட்ஜ் என்னைய அவரோட ரூமுக்கு கூப்பிட்டு பேசினாரு.

சொக்கன் – என்ன சொன்னார் வக்கீல் சார்.

சபா – ஜட்ஜ்க்கும் உங்களை மாதிரி கடவுள் பக்தி அதிகம். சிக்கலான சில கேஸ்களுக்கு ஆண்டவன் தான் அவருக்கு வழி காட்டியிருக்காராம். அந்த மாதிரி தான் உங்க கேஸ்லையும், ஆண்டவன் வழி காட்டினாராம்.

சொக்கன் – என்னது ஆண்டவன் வழி காட்டினாரா?

சபா – ஆமா, உங்க ரெண்டு பேருக்கிட்டேயும் இருக்கிற பேப்பர்ல உள்ள கையெழுத்து உங்க அண்ணனோடதுன்னு தெரிஞ்சவுடனே, ரெண்டுபேரும் சொத்தை சமமாக பிரிச்சுக்குங்கன்னு மறு நாள் தீர்ப்பு சொல்லலாம்னு ஜட்ஜ் நினைச்சிருந்திருக்காரு.

சொக்கன் – ஓ! அப்படியா..

சபா – அன்னைக்கு ராத்திரி அவரோட கனவுல, ஒருத்தன் நல்ல அடம்பரமா செலவு செஞ்சு வாழ்கிற மாதிரியும், இன்னொருத்தான் தான தர்மங்கள் செய்கிற மாதிரியும் தெரிஞ்சுதாம். அடுத்த நாள் தீர்ப்பை தள்ளி வச்சுட்டு, அவரே உங்க ரெண்டு பேரை பத்தியும் ஒரு வாரமா விசாரிச்சு அப்புறம் தான் உங்க பக்கம் தீர்ப்பை சொல்லியிருக்காரு.

(அப்போது கீதா, பாயசத்தோடு உள்ளே வருகிறார்)

சொக்கன் – கீதா, வக்கீல் சார் சொன்னதை கேட்டியா, அந்த ஈசன் ஜட்ஜ் ஐயா கனவுல சூட்சமமா உணர்த்தி நம்ம பக்கம் தீர்ப்பை வழங்க வச்சதை .

கீதா – ஆமாங்க, இறைவன் எந்த காலத்துலேயும் தன்னோட பக்தர்களை கைவிடமாட்டான்ன்னு  புரியிதுங்க.

சொக்கன் – அந்த இறைவன் மேல நாம வச்சிருக்கிற பக்தி பத்தாது கீதா. இங்க சிட்னில மாதந்தோறும் நடக்கிற முற்றோதல்ல கலந்துக்கணும், முடிகிற சமயம் எல்லாம் கோவிலுக்கு போய் அவனை வழிபடணும். முக்கியமா நம்ம குழந்தைகளுக்கும் இறை பக்தியை நாம விடாம ஊட்டனும்.

வக்கீல் – சரியா சொன்னீங்க சொக்கன். நானும் நீங்க சொன்ன விஷயங்களை எல்லாம் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

சொக்கன் – (அவையோரை பார்த்து), அந்த காலத்துலேயும் சரி, இந்த காலத்துலேயும் சரி, இறைவனை நம்பினால், அவன் நம்மை கை விடமாட்டான்னு தெள்ளத் தெளிவாக தெரியுது.  இந்த நம்பிக்கையை தான் நாம அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வளர்க்கணும். அதற்கு ஒரே வழி, குழந்தைகளுக்கு இறை உணர்வை ஊட்டுவது தான்.

திருச்சிற்றம்பலம்

27 comments:

  1. // அந்த காலத்துலேயும் சரி, இந்த காலத்துலேயும் சரி, இறைவனை நம்பினால், அவன் நம்மை கை விடமாட்டான்னு தெள்ளத் தெளிவாக தெரியுது. இந்த நம்பிக்கையை தான் நாம அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வளர்க்கணும். அதற்கு ஒரே வழி, குழந்தைகளுக்கு இறை உணர்வை ஊட்டுவது தான் //

    ஆம்.. நாடகம் மிக சிறப்பாக உள்ளது. மேலும் பல நாடகங்கள் இயற்ற கடவுள் அருள் புரியட்டும்.

    அங்கும் முற்றோதல் நடைபெறுகிறதா..? நன்று நன்று. தேவகோட்டையில் முற்றோதல் கூட்டத்தார் தொடர்ந்து நடத்துகிறார்கள். அழைக்கும் பல ஊர்களுக்கும் சென்று பாடுகிறார்கள். சில நாட்கள் தொடர்ந்தும் நடை பெறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆசிகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      இங்கு ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை முற்றோதல் நடைபெறும். இதுவரை 97 முற்றோதல்கள் முடிந்திருக்கின்றன.

      Delete

  2. அருமையாக, கதைக்குள் கதை சொல்லி நல்ல உரையாடல் மூலம் இறை உணர்வை ஊட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா

      Delete
  3. நல்லது எப்படியோ சொக்கன்-கீதா தம்பதியினருக்கு சொத்து கிடைத்து விட்டது சந்தோஷமே.. சரி பாயசம் எனக்கு எப்ப ? கிடைக்கும் ஏன்னா ? நானும்தானே சொத்து உங்களுக்கே கிடைக்கணும்னு நேற்று பூராம் வேண்டிக்கிட்டே இருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பாயாசத்தை அனுப்பி வைக்கிறோம் நண்பரே.
      உங்களுடைய வேண்டுதல் பலித்துவிட்டது கண்டு மிகவும் மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  4. கதைக்குள் கதை கேட்டிருக்கிறேன். ஆனால் நாடகத்தில் கண்டதில்லை. செம திங்கிங் சார், வசனங்களும் சிம்பிளாக அதே சமையம் கூர்மையாக இருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  5. அருமையான நாடகம்! நம்பினோர் கெடுவதில்லை! என்பதை அருமையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  6. அருமையான நாடகம் கண்டேன் சகோதரரே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

      Delete
  7. அருமையான நாடகம் நண்பரே
    தங்களின் அயரா ஊழைப்பு ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  8. மீண்டும் வருகின்றோம் சார் இதை நிதானமாக வாசிக்க வேண்டும் சார்......கண்டிப்பாக வருவோம்...எங்களுக்கும் இதில் மிகுந்த ஆர்வம் உண்டு சார். கடல் கடந்து தாங்கள் செய்வது மிகப் பெரிய சாதனை என்போம்.....வாழ்த்துக்கள் சார்! மீண்டும் வருகின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி துளசி சார் மற்றும் கீதா சகோதரி.

      Delete
  9. மிக நன்றாக எழுதி, அதில நடித்திருக்கிறீங்க. நல்லதொரு நாடகம். நல்ல தகவலையும் சொல்லியிருக்கிறீங்க. மேலும் உங்க திறமைகளை வெளிக்கொணரவேண்டும். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      Delete
  10. தங்களின் மொழிப்பணியும் சைவப்பணியும் வளர்ந்தோங்கட்டும்!
    தமிழகப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் நாடகங்கள் நடத்தப்படும் என்பதை உயர்வாகக் கருதும் போது அங்குத் தமிழில் நாடகங்கள் நடைபெறுவதைக் காணும் போது மனதிற்குள் பெரிதும் மகிழ்ச்சிதான்!
    தொடருங்கள் அய்யா!

    ReplyDelete
  11. நாடகத் தமிழை காக்கும்பணி வாழ்க..
    படார்னு அடுத்தப் பதிவை போடுங்கப்பா ...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி sago.

      சீக்கிரம் அடுத்த பதிவை எழுதுகிறேன்.

      Delete
  12. நண்பரே! னேற்றும் இன்றுமாக முழுவதும் படித்து முடித்தோம்! என்ன அருமையான காட்சி அமைப்புகள்! கதைக்குள் கதை!!!! அதுவும் ஒன்று அந்தக்காலம், மற்றொன்று இந்தக்காலம்...அதற்கேற்ற தமிழ்.....அருமை! எங்கல் கல்லூரி நாடகக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன!

    தாங்கள் சைவம் வளர்க்க செய்யும் பணிகளுக்கு எங்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கள்! தொடருங்கள் நண்பரே! கடவுளை நம்பினோர் கைவிடப்படார் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் பொறுமையாக இந்த நாடகத்தை படித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

      தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி துளசி சார் மற்றும் சகோ கீதா.

      Delete
  13. என்ன சகோ எப்படி இருக்கிறீர்கள். எங்கே கானோம் என்று பார்க்க வந்தேன். அருமையான நாடகம் ஆனால் இதை மட்டும் தான் பார்த்தேன் சகோ மிகுதி பிறகு பார்க்கிறேன். கொஞ்சம் பிசி அது ஹட்டன் அத்துடன் vacation போனமையால் வர முடியவில்லை மன்னித்துக் கொள்ளுங்கள் சகோ இனியா ஓவியா எப்படி இருக்கிறார்கள். தொடர்கிறேன் சகோ வாழ்த்துக்கள் ...! விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றாக இருக்கிறேன் சகோ. விடுமுறையை நன்றாக கழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மற்ற பதிவுகளை நிதானமாக பாருங்கள் சகோ.

      தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  14. நல்ல நாடகம். இறைவனை நம்பினோர் கைவிடப்படார்.....

    பாராட்டுகள் சொக்கன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete