Monday, September 23, 2013

தமிழின் முச்சங்கங்களும் அவற்றின் தொடர்ச்சியும்


தமிழின் முச்சங்கங்களும் அவற்றின் தொடர்ச்சியும்
             மதுமித்தா சொக்கலிங்கம் – ஆறாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி,     ஹோல்ஸ்வொர்தி
 

தமிழின் முச்சங்கங்கள் தமிழ் நாட்டில் தமிழை வளர்ப்பதற்காக  ருவாக்கப்பட்ட. தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என்ற மூன்று வெவ்வேறு சங்கங்கள் இருந்தன. இச்சங்கங்கள் தமிழை வளர்ப்பதற்கும், கவிர்களை  ஊக்குவிப்பதற்கும், சுவைபடக் காப்பியங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும், மிகப் பெரிய பாலமாக அமைந்தன. 

அன்றைய காலத்தில், தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், தமிழ் வளர்ப்பதற்கான வழிமுறைகள் பலவற்றைக் கையாண்டார்கள். பாண்டிய மன்னரே முதன்  முதலாக அதிகார பூர்வ தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவினார்கள். இது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது: தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என்பவை இவை. (1)

பல புலவர்கள் சரித்திரம் வாய்ந்த கவிதைகளையும்,காப்பியங்களையும் உருவாக்கி தமிழ்ச் சங்கங்கள் முலம், அரங்கேற்றம் செய்தனர். இதற்கு உலகப் பொதுமறை என்று புகழ்பெற்ற  திருக்குறள் ஒரு சான்றாகும். இயல், இசை,  நாடகம் போன்ற கலைகள், தமிழை மேம்படுத்துவதில் ஒரு பெரிய பங்கையளித்தன.(1)

தமிழின் தலைச்சங்கம், கி.மு. 5000ஆம் ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம்,  தமிழை முழுமையாக நேசித்த பழம்பாண்டிய மன்னன்  "காய்சின வழுதி" என்பவரால் நிறுவப்பட்டது. பழைய பாண்டிய நாட்டின், குமரி ஆற்றங்கரையில் அமைந்த தென் மதுரையில் இச்சங்கத்தை நிறுவினார். இச்சங்கத்தில், பல தமிழ் அறிஞர்களும் சிறப்புமிக்க தமிழ்ப் புலவர்களும், பல்வேறு துறைகளில், ஆய்வு செய்தனர். அவர்களில் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார்(1).

திடீரென நிகழ்ந்த கடல் சீற்றத்தால் தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்கு உணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. (1)

இடை சங்கம் - முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னம் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான். இச்சங்கம், ஏறக்குறைய 1500 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. (1)

இச்சங்கத்தில் அவைப் புலவர்களாகத் தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாகக் கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது.(1)

இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுணுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது. (1)

மீண்டும் நடந்த கடல் சீற்றத்தால், பாண்டியநாட்டுக் கபாடபுரமும், கடலில் முழ்கியது. இதனால் இரண்டாம் சங்கம் கண்டெடுத்த மாபெரும் காப்பியங்கள் கடலில் மூழ்கின.

மூன்றாம் சங்கம் - அழிவுற்ற தமிழ்ச் சங்கத்தை மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உருவாக்கி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தைத் தொடங்கினான். கடைச்சங்க காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை. இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைபெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது. (1)

கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணர் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே. இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே. (1)

கடைச் சங்கத்தில், நம்மை ஆச்சரியப்படுத்தும் சில நிகழ்ச்சிகள் நடந்தன. பழைய திருவிளையாடல் புராணத்தின் மூலமாக இரு சங்கப்பலகைகள் இருந்ததாக அறியமுடிகிறது. ஒன்று "மொழியறி சங்கப்பலகை" என்றும் மற்றொன்று "பாவஹி சங்கப்பலகை” என்றும் அழைக்கப்பட்டன. பாக்களைச் சங்கப்பலகை ஏற்றால்தான் புலவர் பெருமக்கள் அப்பாக்களைப் போற்றுவார்களாம். மேலும் கடைச் சங்கத்தில் இருந்த 49 புலவர்களில் 24 புவர்களின் உருவச் சிலைகள், மதுரை அம்மன் சன்னதி எதிரே உள்ள மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. (2) பொய்யா மொழிப் புலவர் அச்சிலைகள் முன்பு நின்று பாடியதாகவும் அவரது பாட்டைக் கேட்டு, அச்சிலைகள் ரசித்துத் தலை அசைத்ததாகவும் அறிய முடிகிறது. (3)

சிறந்து விளங்கிய கடைச் சங்கமானது பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியின் காலத்திற்குப்பின் மறைந்தொழிந்தது. அவனுக்குப் பின் வந்த பாண்டிய மன்னர்கள், உள்நாட்டு அரசியல் குழப்பங்களினாலும், அண்டைய நாட்டு மன்னர்கள் அவர்களுடன் போர் தொடுத்ததாலும்,  தமிழை  வளர்க்க இயலாமல் போயிற்று. மேலும் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட  கடும் பஞ்சத்தால், தமிழ்ப் புலவர்கள், சேர சோழ நாடுகளை நோக்கி இடம் பெயர்ந்தார்கள்.

முச்சங்கங்களும் அழிந்த நிலையில் சுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின் 1901ஆம் ஆண்டில் பாண்டித்துரைத் தேவரால், மதுரை மாநகரில் நான்காம் தமிழ் சங்கம் அமைக்ப்பட்டதாகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இச்சங்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும்  முன்பு முச்சங்கங்களில் தமிழ் மொழி பெற்ற உச்சநிலையைப் போல் மீண்டும் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காகவும் நான்காம் தமிழ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. (4)  

இந்தத் தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த காவியங்கள், காப்பியங்கள், நமது வாழ்கைக்குத் தேவையான நல்லொழுக்க நெறிகளையும், கருத்துக்களையும்  பல வகையில் அளிக்கின்றன. இன்று இது மாணவர்கள் பயிலும் வகையில் மிக எளிமைப் படுத்தப்பட்டு கற்றுக் கொடுக்கப்படுகின்றது. நமது கலாச்சாரம் சார்ந்த அன்றாட வாழ்க்கைக்கு, உதவியாக இவை இருப்பதுடன் தாய் மொழி என்கிற மன நிறைவை எப்பொழுதும் நமக்கு ஏற்படுத்துகின்ற.   மேலும் தமிழை நமது வருங்காலச் சந்ததிகளுக்காகப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் நமக்கு ஏற்படுத்துகின்றது.  நாமும் தமிழ் வளர்க்க என்றும் பாடுபடுவோம் என உறுதி எடுப்போம்

சான்றுக்குறிப்பு:





 

 

 

 

 

No comments:

Post a Comment