Friday, November 23, 2012

காதல் கீதம் - 5

பகுதி - 4

அடைக்கப்பன் ஜானகியின் வீட்டில் நன்றாக சாப்பிட்டு விட்டு அவளின் தந்தையிடமும், தாயிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனித்தான். ஆனால் அவன் மனதோ, ஜானகியை பார்க்காமல் வர மாட்டேன் என்று சண்டித்தனம் பண்ணியது. எப்படி ஜானகியை பார்த்து விட்டு கிளம்புவது என்று அவன் மூளையும் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு சுறு சுறுப்பாக யோசிக்க் ஆரம்பித்தது. அப்பொழுது தான் அவனுக்கு, ஜானகியின் அறைக்குள் அவள் அப்பத்தாள் சென்றது நியாபகம் வந்தது. உடனே அவள் தந்தையிடம் அப்பத்தாவிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன் என்று கூறி, அந்த அறைக்குள் சென்று, அப்பத்தாவிடம், ஜானகியிடமும் போய் வருகிறேன் என்று கூறினான். ஜானகியும் சரிங்க என்று கூறி தலை அசைத்தாள். ரொம்ப நாள் கழித்து, ஜானகியை பார்த்த உடன், அடைக்கப்பனுக்குள் ஒரு புதிய உற்சாகம் ஊற்றெடுத்தது.

ஒரு நாள், அடைக்கப்பன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஜானகியின் அண்ணன் சிதம்பரம் அங்கு வந்தான்.

சிதம்பரம்,”என்ன அடைக்கப்பன் எப்ப படமாத்தூருக்கு வந்தீங்க” என்று கேட்டான்.

அடைக்கப்பனும், “நான் வந்து இரண்டு வாரம் ஆச்சு, நீங்க தான் ஏதோ ட்ரைனிங்குக்கு போயிருந்தீங்களாமே” என்றான்.

“ஆமாம் அடைக்கப்பன், ட்ரைனிங் முடிச்சு நேற்று தான் வந்தேன். அதான் உங்களை பார்த்துட்டு வரலாம்னு வந்தேன். எப்படி இருக்கு எங்க ஊரு” என்று கேட்டான் சிதம்பரம்.

(மனதுக்குள் “உன்னோட தங்கச்சி மட்டும் இல்லன்னா, எவன் இந்த காட்டுக்குள்ள வருவான் என்று நினைத்துக் கொண்டு). “ரொம்ப நல்லா இருக்கு அதுவும் ஃபேக்டரிகுள்ள இருக்கிற காலனிக்கு போயிட்டா, அது ஒரு தனி உலகமா இருக்கு. எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்குது” என்று கூறினான் அடைக்கப்பன்.

“மெட்ராஸ்ல இருக்கிறவங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவே பிடிக்காது. பரவாயில்லையே, உங்களுக்கு பிடிச்சிருக்கு ஆச்சிரியமா இருக்கு. சரி, அடிக்கடி வீட்டுக்கு வாங்க” என்று கூறிவிட்டு சென்றான் சிதம்பரம்.

சிதம்பரம் சென்ற பிறகு, “அடைக்கப்பா, உனக்கு போன், மெட்ராஸ் ஆபிஸ்லேருந்து சுரேஷ் பேசுறான்” என்றாள் பூங்குழலி.

“சொல்லு சுரேஷ் எப்படி இருக்கே?”

“நான் நல்லா இருக்கேன். ஆமா உன் ஆளை பார்த்து பேசுனியா?”

“அவளை அவள் வீட்டில் போய் பார்த்துட்டு வந்தேன். ஆனால் பேசலை”.

“இப்படியே, அவ கிட்ட உன் காதலை சொல்லாம இருந்த, அவளை நீ மறந்துட வேண்டியது தான். அவளுக்கு காலேஜ் திறக்கிறதுக்கு முன்னாடி சொல்லிடு. அப்புறம் அவள் காலேஜ் போயிட்டா, உன்னால சொல்ல முடியாது”.

“நீ வேற பயமுறுத்தாதே, எப்படியாவது அவள் காலேஜ் போறதுக்கு முன்னாடி சொல்லிடுறேன்”.

“அவ கிட்ட  உன் காதலை சொன்ன உடனே, நீ எனக்கு சொல்லணும் என்ன. சரி நான் வச்சுடுறேன்”.

அடைக்கப்பன் போனை வைக்கும் போது, பூங்குழலி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூங்குழலி, “அடைக்கப்பா இங்கே என்ன நடக்குது. யாரு காலேஜ் போறதுக்கு முன்னாடி, என்ன சொல்லப் போற”, என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு என்றாள்.

அடைக்கப்பனோ, “நீ யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி, தான் ஜானகியை காதலிக்கும் விஷயத்தை சொன்னான்”.

பூங்குழலியும், “அதானே பார்த்தேன், “சோழியன் குடுமி சும்மா ஆடுமா” சேகர் வராம நீ வரும்போதே நினைச்சேன், இப்படி ஏதாவது இருக்கும்னு. அதனலாதான், இப்ப நீ பொண்ணுங்க கிட்ட எல்லாம் சரியா பேசுறது இல்லையா. எப்படியோ நல்லா இருந்தா சரி. ஆமா, எப்ப உன் ஆளை காட்டப் போறே”  என்றாள்.

அடைக்கப்பனும், “நேரம் வரும்போது காட்டுறேன்” என்றான்.

ஒரு நாள் அடைக்கப்பன் இரவு 2 மணி வரை வேலை பார்த்து விட்டு, தன் அறைக்கு சென்று படுத்தான். அவன் தங்கி இருக்கும் அந்த காலனியானது ஃபேக்டரிக்கு பின் புறத்தில் கட்டப்பட்டிருந்தது. அங்கு தான் தொழிலாளிகளுக்கும்,அதிகாரிகளுக்கும் வீடு இருக்கிறது. திருமணமாகாத இளைஞர்கள் dormitoryயில் தங்கிக் கொள்வார்கள். அடைக்கப்பன் மாதிரி வெளியூரிலிருந்து வருபவர்கள் விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்வார்கள். அடைக்கப்பனும், பூங்குழலியும் விருந்தினர் மாளிகையில் தனித் தனி அறையில் தங்கி இருந்தனர். ஜானகியின் வீடு, அந்த விருந்தினர் மாளிகைக்கு பின்னாடி தான் உள்ளது. ஜானகியின் வீட்டில் இருப்பவர்கள், வெளியே போகும்போது, விருந்தினர் மாளிகையை கடந்து தான் செல்ல வேண்டும். இரவு 2 மணிக்கு வந்து படுத்ததால், காலை லேட்டாக 10 மணிக்கு எழுந்து, விருந்தினர் மாளிகையின் வாசலில் நின்றுக் கொண்டு பல் விளக்கிக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து தான், ஜானகியும் அவள் தாயும் அந்த வழியே வந்தார்கள்.

ஜானகியின் தாயார் அவனைப் பார்த்து, “என்ன தம்பி உடம்புக்கு முடியலையா, வேலைக்கு போகாம இருக்கீங்க” என்று கேட்டார்.

அடைக்கப்பனோ, “அது எல்லாம் ஒன்றும் இல்லை, இதோ இப்பக் கிளம்பி விடுவேன்” என்று கூறினான்.

அந்த அம்மாளும், “சரி தம்பி” என்று கூறிவிட்டு அவனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தார்கள்.

ஜானகியும், 10 மணிக்கு அவன் பல் விளக்கும் கோலத்தைப் பார்த்து சிரித்து விட்டு சென்றாள்.

அடைக்கப்பனுக்கோ, ஜானகியைப் பார்த்தது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனாலும் 10மணிக்கு, அவர்கள் வரும்போது பல் விளக்கிக் கொண்டிருந்தது, சற்று சங்கடமாகவும் இருந்தது. ஏன் இவ்வளவு லேட்டாக எழுந்தோம் என்று சொல்லாமல் போய் விட்டோமே என்று தன்னையே நொந்துக் கொண்டான். அவனுக்கு ஜானகி தன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்தாளா, இல்லை தன்னைப் பார்த்த சந்தோசத்தில் சிரித்தாளா என்று  புரியவில்லை. சரி, எப்படி நினைச்சிருந்தாலும் பரவாயில்லை. நம்மளைப் பார்த்து சிரித்து விட்டாள், அது போதும் என்று எண்ணிக் கொண்டு, அவசர, அவசரமா ஒரு காக்காக் குளியலைப் போட்டு, மெஸ்ல போய் அரக்க பறக்க சாப்பிட்டு ஆபிஸ் போனான். ஆனால், அவனால் ஒழுங்காக வேலை பார்க்க முடியலை. ஜானகியின் நினைப்பாகவே இருந்தான். அதனால் வேலையை தப்பு தப்பாக செய்துக் கொண்டிருந்தான். கஸ்டமர் ரெகொர்டை தப்பாக அப்டேட் செய்து விட்டான். எதேச்சியாக அதனைப் பார்த்த, கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் மேனேஜர்,

“என்ன அடைக்கப்பா, என்ன இப்படி தப்பா அப்டேட் பண்ணிட்டீங்க” என்றார்.

உடனே சுதாரித்த அடைக்கப்பன், “சாரி ஸார், நேற்று ராத்திரி வேலை முடிச்சு போறதுக்கு 2 மணியாச்சு, காலைல இருந்து ஒரே தலைவலியாவும், மயக்கமாகவும் இருக்கு” என்றான்.

அந்த மேனேஜர், “முதல்ல போய் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளைக்கு வாங்க” என்றார்.

அடைக்கப்பனும் இது தான் சாக்கு என்று , தன் அறைக்கு திரும்பி, கட்டிலில் படுத்துக் கொண்டு, அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியை அசை போட ஆரம்பித்தான். மீண்டும் ஜானகியை நினைக்க ஆரம்பித்தவுடன், அவன் மனதுக்குள் ஒரு ஹைக்கூ கவிதை உதித்தது.

     “உன் வாய் சிரித்ததில் உன் பற்கள்,

     என் கண்களை கூசச் செய்தது.

     உன் முகம் மலர்ந்ததில் உன் கண்கள்,

     என் இதயத்தை நொறுங்கச் செய்தது”.

 சில நாட்கள் சென்றது, அடைக்கப்பனால், ஜானகியை பார்க்கத்தான் முடிந்ததே தவிர, அவளுடன் பேச முடியவில்லை. ஜானகிக்கு கல்லூரி திறக்கின்ற நாளும் நெருங்க ஆரம்பித்தது. ஒரு முறை சிவகங்கைக்கு அடைக்கப்பனும், பூங்குழலியும் மற்ற சில நண்பர்களும் படம் பார்க்க சென்ற போது, ஜானகியும் அவள் குடும்பமும் படம் பார்க்க வந்திருந்தார்கள். அப்போது பூங்குழலிக்கு ஜானகியை காட்டினான். பூங்குழலியும், “நீ நல்ல பெண்ணைத்தான் தேர்வு செய்திருக்கிறாய், சீக்கிரம் உன்னுடைய காதலை சொல்லு, உனக்கு கூச்சமா இருந்தால்  நான் தூது செல்லட்டுமா” என்று கேட்டாள்.

அடைக்கப்பனும், “எதற்கு வேண்டுமானாலும் தூது இருக்கலாம், ஆனால் காதலுக்கு மட்டும் தூது இருக்க கூடாது, நான் எப்படியாவது அவளிடம் என் காதலை சொல்லி விடுகிறேன்” என்று கூறினான்.   

ஒரு நாள், அடைக்கப்பன் மும்முரமாக ப்ரோக்ராம் எழுதிக் கொண்டிருக்கும் போது, வெளியே போயிருந்த பூங்குழலி, வேக வேகமாக அடைக்கப்பனிடம் சென்று,

“அடைக்கப்பா, சீக்கிரம் வெளியே வா” என்றாள்.

“நான் இந்த ப்ரோக்ராம்ல, முக்கியமான கால்குலேஷன் எழுதிக்கிட்டு இருக்கேன், இப்ப என்னால வர முடியாது” என்றான்.

“ஐயோ அடைக்கப்பா, தலை போற காரியம், சீக்கிரம் வா” என்று விடாப்பிடியாக அவனை வெளியே வரவைத்தாள்.

அடைக்கப்பனும், பூங்குழலியோட ஃபேக்டரிக்கு வெளியே வந்து பார்த்த போது, ஜானகியும், அவள் தந்தையும் பக்கத்திலிருக்கும் பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டிருந்தார்கள். ஜானகியை காலேஜுக்கு வழி அனுப்புவதற்காக அவள் தந்தை நின்றுக் கொண்டிருந்தார்.

பூங்குழலியும், “அடைக்கப்பா, அவள் காலேஜுக்காக தஞ்சாவூர் போகப் போறாள். இது தான் சரியான சந்தர்பம், நீயும் அவளோட போய் உன் காதலை சொல்லிவிடு. சிவகங்கைல வேண்டாம். வேற எங்கையாவது பஸ் மாறுவதற்காக நிக்கும் போது பேசு” என்று கூறினாள்.

அடைக்கப்பனுக்கும், பூங்குழலி சொல்வதில் அர்த்தம் இருப்பதாக தோன்றியது. இப்ப விட்டா, அப்புறம் மறுபடியும் அவள் விடுமுறைக்கு வரும் போது தான் காதலை சொல்ல முடியும். அதனால இப்பவே சொல்லிடலாம் என்று எண்ணினான். அதற்கு ஏற்றார் போல, சேல்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கும் அவன் நண்பன் ஆபிஸ் வேலையாக சிவகங்கை போவதற்கு பைக்குடன் ஃபேக்டரியிலிருந்து வெளியே வந்தான்.

“பூங்குழலி, நீ மேனேஜர்கிட்ட அவசரமா நான் காரைக்குடி வரைக்கும் போறேன் மதியம் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிடு” என்று சொல்லி தன் நண்பனின் பைக்கில் ஏறிக் கொண்டு சிவகங்கை பஸ் ஸ்டாண்டுக்கு சென்றான்.

அடைக்கப்பன், ஜானகிக்காக சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருந்தான்.

ஜானகியும் படமாத்தூரிலிருந்து சிவகங்கை வந்து சேர்ந்தவுடன், இவனைப் பார்த்து விட்டாள். ஆனால் பார்க்காத மாதிரி, காரைக்குடிக்கு போகும் பஸ்ஸில் ஏறினாள். அடைக்கப்பனும் அந்த பஸ்ஸிலேயே ஏறி, ஜானகி உட்கார்ந்திருக்கும் சீட்டிற்கு இடதுபுறமாக இருக்கும் சீட்டில் அமர்ந்துக் கொண்டான். பஸ்ஸும் காரைக்குடி வந்து சேர்ந்தது. ஜானகியும், அடைக்கப்பனை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் இறங்கி, தஞ்சாவூர் செல்லும் பஸ்ஸில் ஏறப் போனாள். அவள் பின்னாடியே சென்றான் அடைக்கப்பன்.    
[தொடரும்]                                                            பகுதி - 6

No comments:

Post a Comment