Sunday, November 18, 2012

காதல் கீதம் - 4

ஜனாகியை பார்ப்பதற்கும், அந்த ஊரில் போயி வேலை செய்வதற்கும் ஒரு  யோசனையை அடைக்கப்பனின் மூளை கண்டுப் பிடித்தது. அந்த யோசனை வந்த பிறகு தான் அவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.
அவன் நேராக சேகரிடம் போயி, சேகர், உன்னிடம் கொஞ்சம் தனியா பேசனும், கொஞ்சம் கேண்டீனுக்கு வரியா என்று கூப்பிட்டான்.
சேகரும், என்ன அடைக்கப்பா, அப்படி என்ன என்னிடம் தனியா பேசனும் என்று கேட்டுக் கொண்டே அடைக்கப்பனோடு கேண்டீனுக்கு சென்றான்.
அடைக்கப்பனும், தன் மனதை கொள்ளையடித்த அந்த தேவதையைப் பற்றிக் கூறினான்.
சேகரும் கற்பூரத்தைப் போல கப்பென்று விஷயத்தை புரிந்து கொண்டான். அடைக்கப்பா, உன் ஆளை பார்பதற்கு நீ அந்த ஊருக்குப் போயி வேலை பார்க்கணும் அது தானே” என்று கேட்டான்.
“சரியா சொன்ன சேகர், நீ மட்டும் அந்த ஊருக்கு போகலைன்னு சொன்னா, அந்த முசுடு மேனேஜர் என்னைய அந்த ஊருக்கு அனுப்புவான். அப்புறம் நான் என் ஆளிடம் காதலை வளர்த்துப்பேன். இந்த ஒரு உதவியை மட்டும் நீ செஞ்சா, நான் உன்னைய என்னைக்கும் மறக்கவே மாட்டேன்” என்றான் அடைக்கப்பன்.
“நான், என்ன காரணத்தை சொல்லி போகாம இருக்க முடியும்” என்று கேட்டான் சேகர்.
“யோசிச்சு, ஒரு நல்ல காரணத்தை கண்டுப்பிடிக்கணும். நானும் யோசிக்கிறேன். ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு மேனேஜர் கிட்ட சொல்லு, அப்பத்தான் யாருக்கும் சந்தேகம் வராது” என்று கூறினான் அடைக்கப்பன்.
“என்னமோ அடைக்கப்பா, நான் இப்படி பொய் சொல்றதுனால, உன்னோட காதல் வளரும்னா, அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்” என்றான் சேகர்.
பிறகு இருவரும் தங்கள் இருக்கைக்கு வந்து அமர்ந்தார்கள். அடைக்கப்பனோ, மேனேஜரிடம், சேகரை என்ன காரணத்தை சொல்ல சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
அன்று வீட்டிற்கு போன பிறகும், அடைக்கப்பன் தன் மண்டையை போட்டு உடைத்து கடைசியில் ஒரு உருப்படியான காரணத்தை கண்டுப் பிடித்தான். உடனே சேகருக்கு போன் போட்டு, “சேகர், நீ ரெண்டு நாள் sick leave போடு. அப்புறம் மூணாவது நாள் மேனேஜரிடம் போய், உனக்கு “dust allergy” இருக்கு, அதனால டாக்டர் உன்னைய சுகர் ஃபேக்டரில எல்லாம் போய் வேலை செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்கிறார்னு சொல்லி, அதனால  அந்த ஊருக்கு போகலைன்னு சொல்லிடு” என்று கூறினான்.  
உடனே சேகரும், “அடைக்கப்பா உனக்கே, இது நல்ல இருக்கா, நீ உன் ஆளை பார்க்குறதுக்கு நான் நோயாளியா ஆகனுமான்னு” கேட்டான்.
அடைக்கப்பனும், “சாரிடா சேகர், எனக்கு வேற வழி தெரியல. இது தான் ஒரு நல்ல யோசனையா இருக்குது. அதுவும் இல்லாம யாருக்கும் ஒரு சந்தேகமும் வராது” என்றான்.
அடைக்கப்பன் சொன்ன யோசனை படியே, சேகரும் மேனேஜரிடம் தான் அந்த சக்தி சுகர்ஸ் ஃபேக்டரி இருக்கும் ஊருக்கு போக வில்லை என்று கூறினான்.
மேனேஜரும் வேறு வழியில்லாமல் சேகர் சொன்ன காரணத்தை கருத்தில் கொண்டு, அடைக்கப்பனுக்கு அந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பை வழங்கினார்.
மேனேஜர், அடைக்கப்பனை கூப்பிட்டு, “அடைக்கப்பா, சேகருக்கு ஏதோ “dust allergy”யாம் அதனால அந்த ஊருக்கு போக முடியாதுன்னு சொல்லிட்டான். நீ அந்த ஊருக்கு போவேன்ற தைரியத்துல தான் நான் சேகர் கிட்ட,dust allergy”கான மருத்துவ சான்றிதழ் எல்லாம் கேக்கலை. நீ அடுத்த மாசம் அந்த ஊருக்கு போறியா? எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பிக்கட்டுமா” என்று கேட்டார்.
அடைக்கப்பனும், “நான் போறேன் சார்” என்றான்.
பிறகு வீட்டுக்கு வந்து தன் பெற்றோரிடம் தான் சக்தி சுகர்ஸ் ஃபேக்டரி இருக்கும் படமாத்தூர் ஊருக்கு போகப் போவதாக சொன்னான்.
அவனுடைய அப்பாவும், “அந்த படமாத்தூர் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.
“சிவகங்கைக்கு பக்கத்தில் இருக்கிறது” என்று கூறினான் அடைக்கப்பன்.
உடனே அதற்கு அவர், “நம்ம ஊருக்கு பக்கத்துல தானா அந்த ஊரு இருக்குது. அப்ப, இனிமே நம்ம பங்காளிங்க வீட்டுல நடக்குற எல்லா நல்லது கெட்டதுக்ககும் நீ போயிட்டு வந்துடு” என்றார்.
அவனுடைய அம்மாவோ, “அந்த ஊருல தானே நம்ம மணி பொண்டாட்டியோட மாமாவோ, யாரோ இருக்காங்க இல்ல” என்று கேட்டாள்.
அடைக்கப்பனும், “யாரும்மா இருக்காங்க? எனக்கு தெரியாதே” என்று சொன்னான்.
“அதாண்டா, மணி கலியானத்துல, சித்தி சொன்னா இல்ல, மணி  பொண்டாட்டி உண்ணாவோட மாமா இருக்காங்கன்னு, நீ மறந்திருப்ப” என்று தெளிவு படுத்தினாள்.  
அடைக்கப்பனோ, “ஓ! அப்படியா” என்று ஆச்சிரியப்பட்ட மாதிரி நடித்தான்.
“சரி, அங்க தங்குறதுக்கு,சாப்பிடுறதுக்கு எல்லாம் உங்க கம்பெனியே வழி செய்துக் கொடுத்துடுமா?” என்று கேட்டார் அவனுடைய தந்தை.
“சக்தி சுகர்ஸ்லேயே எங்களுக்கு தங்குறதுக்கு ரூம் கொடுத்துடுவாங்க . அப்புறம் அங்கேயே சாப்பிடுறதுக்கு மெஸ் இருக்கு” என்று கூறினான் அடைக்கப்பன்.
“அப்ப உனக்கு சாப்பாட்டுக்கு பிரச்சனை இல்லை. எதுக்கும் நான் மணியிடம் நீ படமாத்துருக்கு போறதை சொல்லி, அவன் பொண்டாட்டியோட மாமாக்கிட்ட சொல்ல சொல்றேன்” என்றாள் அவன் தாய்.
“சரிம்மா அப்படியே செய்யுங்க” என்றான் அடைக்கப்பன்.
சில நாள் கழித்து அலுவலகத்தில் அடைக்கப்பன் மும்முரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய நண்பன் சுரேஷ் அங்கு வந்து அவன் எழுதியதை படித்துப் பார்த்தான். அது ஒருக் காதல் கவிதை.
     “காதல் என்றால்
     என்னவென்று தெரியாமல்
     வாழ்ந்து வந்தேன்         
     என்னவளை சந்திக்கும் வரை”.
 
“என்ன அடைக்கப்பா, இன்னும் காதலை சொல்லக் கூட இல்ல, அதுக்குள்ள கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்ட” என்றான் சுரேஷ்.
“ஆமாம் சுரேஷ், இப்ப எல்லாம் கவிதை தன்னால வருது. அதுவும் இல்லாம, காதல் பாடல்கள், காதல் படங்கள் தான் ரொம்ப பிடிக்குது” என்றான் அடைக்கப்பன்.
“நீ, அந்த ஊருக்கு போனதும் எப்படியாவது, ஜானகியிடம் உன் காதலை சீக்கிரம் சொல்லிடு” என்றான்.
“சரி, சுரேஷ் நான் சொல்றதுக்கு முயற்சி செய்றேன்” என்று சொன்னான் அடைக்கப்பன்.
ஒரு வழியாக அடைக்கப்பனும், பூங்குழலியும் படமாத்தூருக்கு வந்து சேர்ந்தார்கள்.
அடைக்கப்பன் முதல் நாள் அன்று கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டில் தன்  வேலையை ஆரம்பித்த பிறகு, நேராக ப்ரொடக்ஷன் டிபார்ட்மெண்டுக்கு சென்றான். அங்கு தான் ஜானகியின் தந்தை நாராயணன், ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆக வேலை பார்க்கிறார். அவரும் இவனைப் பார்த்தவுடன், எழுந்து வந்து இவனை வரவேற்று பேசி அனுப்பினார்.
அடைக்கப்பன் எதிர்பார்த்ததோ, தன்னை வீட்டுக்கு கூப்பிடுவார், அப்படியே ஜானகியையும் பார்க்கலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவர் வீட்டுக்கு கூப்பிடாதது வருத்தத்தை அளித்தது. மேலும் அவன் பழகிய அவளுடைய அண்ணன் சிதம்பரமும் ஊரில் இல்லாதது அவனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.
இப்படியே ஒரு வாரம் ஓடியது. அடைக்கப்பனும் தினமும் ரூமில் தூங்கி எழுந்து, மெஸ்ஸில் சாப்பிட்டு வேலை பார்த்து வந்தான். ஜானகியை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும், ஜானகிக்கு கல்லூரி விடுமுறை என்பதால், அவளும் சேலத்திலிருந்து, வீட்டுக்கு வந்து இருந்தாள்.
ஒரு நாள் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஜானகியின் தந்தை நாராயணன் அங்கு வந்தார்.
“அடைக்கப்பன் எப்படி இருக்கீங்க? இப்ப என் கூட மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வாங்க” என்றார்.
அடைக்கப்பனுக்கோ, முதலில் ஒன்றும் புரிய வில்லை. பிறகு “ஒரு பத்து நிமிஷம் இருங்க, வந்து விடுகிறேன்” என்று கூறி, பார்த்துக் கொண்டிருந்த வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு அவருடன் ஃபேக்டரிக்குள்  இருக்கும் அவருடைய வீட்டுக்கு போனான்.
அங்கு, ஜானகியின் அம்மாவும், அவள் அப்பத்தாவும் (அப்பாவின் அம்மாவும்) அவனை உபசரித்து சாப்பிட அழைத்துப் போனார்கள். அதற்குள் அடைக்கப்னின் கண்களோ, பக்கத்து அறையில் இருக்கும் ஜானகியை சந்தித்து விட்டன. இதற்கிடையில் அவளின் அப்பத்தாவும் ஜானகி இருந்த அறைக்குள் சென்று விட்டார்கள்.
அவனும் வித விதமாக சமைத்து வைத்திருந்த சமையலை நன்றாக மூக்குப் பிடிக்க ஒரு பிடி பிடித்து விட்டு தான் எழுந்தான். பிறகு அவளின் தந்தையிடமும், தாயிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனித்தான். ஆனால் அவன் மனதோ, ஜானகியை பார்க்காமல் வர மாட்டேன் என்று சண்டித்தனம் பண்ணியது. எப்படி ஜானகியை பார்த்து விட்டு கிளம்புவது என்று அவன் மூளையும் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு சுறு சுறுப்பாக யோசிக்க் ஆரம்பித்தது.
[தொடரும்]                                                                                      பகுதி- 5

No comments:

Post a Comment