Sunday, October 14, 2012

மாற்றான் VS சாருலதா – விமர்சனம்


வீட்டு அம்மணியும், மகாரணிகளும் ஊருக்கு சென்று விட்டதால், படம் பார்க்க நிறைய நேரம் கிடைக்கிறது. முன்பெல்லாம் ஒரு படத்தை பார்த்து முடிக்க கிட்டதட்ட, 10-15 நாட்கள் ஆகும். அதற்குள் அந்த கதையே மறந்து போகும். ஆனால் இப்பொழுதோ, ஒரு படத்தை பார்த்து முடித்து விட்டு தான் அடுத்த வேலையே. இரண்டு வாரத்துக்கு முன்பு, பிரியாமணி  நடித்த சாருலதா படத்தை பார்த்தேன். இதற்கு விமர்சனம் எழுதலாம் என்று நினைக்கும்போது மாற்றானும், இதே மாதிரி ஒட்டிப் பிறந்தவர்களின் வாழ்கையில் நடக்கும் கதை என்று தெரிந்தது. நேற்று தான் மாற்றானை திரை அரங்கில் சென்று பார்த்தேன். சரி, இரண்டு படங்களையும் தொடர்பு படுத்தி ஒரு விமர்சனத்தை எழுதலாம் என்று நினைத்து, இதோ இரு படங்களின் திரை விமர்சனம்.

முதலில், இந்த இரு படங்களின் ஒற்றுமைகளை பார்ப்போம்.

மாற்றானில் சூரியா இரட்டைப் பிறவிகளாக ஒட்டிப் பிறந்திருப்பார்கள். சாருலதாவிலோ ப்ரியாமணி ஒட்டிப் பிறந்திருப்பார்கள். இரு சூரியாக்களுக்கும் காஜல் அகர்வாலின் மீது காதல் வரும். அதே மாதிரி, இரு பிரியாமணிகளுக்கும் ஸ்கந்தாவின் மீது காதல் வரும். இரு படங்களிலும், ஒட்டிப் பிறந்தவர்களில் ஒருவர் இறந்து விடுவார், இன்னொருவரோ, மற்றவரை போல் மாறி விடுவார்.  இரு படங்களிலும் இரட்டையர்களை பிரித்து காட்டுவதற்கு அவர்களின் சிகை அலங்காரத்தில் வித்தியாசத்தை காட்டியிருப்பார்கள். வெவ்வேறு பிரச்சனைகளுக்காக இரண்டு சூரியாக்களும், இரண்டு பிரியாமணிகளும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள். இரண்டு சூரியாக்களும் நடனமாடுவார்கள். அதே மாதிரி, இரண்டு பிரியாமணிகளும் வயலின் வாசிப்பார்கள்.

இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தாலும், இரு படங்களின் கதைக்களம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்கள்.


  
சாருலதா - திகில் படமான 'சாருலதா' தாய்லாந்தில் வெளியான 'அலோன்' என்ற படத்தின் தழுவலாகும். சாருவும், லதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, எந்த நிலையிலும் பிரியக்கூடாது என்று உறுதியோடு வளர்கின்றனர். சாதுவான குணம் கொண்ட பெண்ணாக சாருவும், முரட்டுக் குணம் கொண்ட பெண்ணாக லதாவும் வளர்கிறார்கள். இருபது வயது வரை எந்தப் பிரச்சனையயும் இல்லை. அதன் பின் ஸ்கந்தாவை பார்த்த முதல் பார்வையிலே காதலில் விழுகிறார் லதா. எங்கே தன் காதலால், சாருவை பிரிய நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, தன் காதலை மனதுக்குள்ளேயே புதைத்து விடுகிறார். இது தெரியாமல், ஸ்கந்தா சாருவை காதலிக்க, சாருவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். இதை அறிந்த லதாவோ “நான் உனக்காக என் காதலை குழி தோண்டி புதைத்தால், நீங்கள் இருவரும் எனக்கா துரோகம் செய்கிறீர்கள்” என்று சாருவோடு சண்டை போடுகிறார். இந்த சண்டையில், அசந்தர்ப்பமாக இருவரில் ஒருவர் இறந்து விடுகிறார். இன்னொருவர் ஸ்கந்தாவை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கையில், இறந்தவரின் ஆவி தன்னோடு ஒட்டிப் பிறந்த சகோதரியை பயமுறுத்தி, அவளை நிம்மதியில்லாமல் செய்கிறது. இறந்தது யார், அந்த ஆவி அவர்கள் இருவரையும் சேர்ந்து வாழ அனுமதித்ததா என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடை கிடைக்கிறது. இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதே பிரியாமணியின் நடிப்பு தான். இரண்டு கதாபாத்திரங்களை தன் உடல் அசைவுகளின்  மூலம் வித்தியாசப்படுத்தி பிரமாதமாக நடித்திருக்கிறார். தான் ஒரு தேசிய விருது வாங்கிய நடிகை என்பதை மீண்டும் அந்த இறுதிக் காட்சியில் நிருபித்திருக்கிறார். இயக்குனர் பொன் குமரனுக்கு இது முதல் படம். தன் முத்திரையை படிக்க முயற்சித்து, அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.



மாற்றான் – அகிலனும், விமலனும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இவர்கள் இப்படி பிறப்பதற்கு, இவர்களின் தந்தை தான் காரணம். சூர்யாவின் தந்தை ஒரு மரபணு ஆராய்ச்சியாளர். தனக்கு பிறக்கப் போகும் குழந்தை பல சக்திகள் கொண்டதாக பிறக்க வேண்டும் என்று நினைத்து, தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறக்கச் செய்கிறார். அந்த ஆராய்ச்சியின் தோல்வியால் ஒரு இதயம், இரு உடல் என்று இரட்டை குழந்தை ஒட்டி பிறக்கிறது.இந்நிலையில், ஏழ்மையில் இருக்கும் அவர், குழந்தைகளுக்கான பால் பவுடர் ஒன்றை தயாரித்து அதன் மூலம் பெரிய கோடீஸ்வரனாகிறார். குறுகிய காலத்தில் அந்த நிறுவனம் அடையும் வளர்ச்சியை கண்டு, போட்டி நிறுவனங்கள் அந்த பால் பவுடர் தயாரிக்கும் முறையை அறிய முயற்சிக்கிறார்கள்.  ரஷ்யாவில் இருந்து வரும் ஒரு பெண்ணும், சூர்யாவின் அப்பாவுடைய பால்  பவுடர் நிறுவனத்தை உளவு பார்க்கிறார். இதற்கிடையில் அந்த நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரியும் காஜல் அகர்வாலுக்கும். இரட்டை சூர்யாவில் அமைதியான சூர்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. சூர்யாவின் அப்பாவுடைய பால் பவுடர் நிறுவனத்தைப் பற்றி தகவலை சேகரிக்கும் அந்த ரஷ்ய பெண் கொல்லப்படுகிறார். கொலை செய்யப்பட்ட அந்த பெண், இறப்பதற்கு முன்பு தான் சேகரித்த தகவல்களை ஒரு பென்டிரைவில் காப்பி செய்து அதை விழுங்கி விடுகிறார். அந்த பென்டிரைவ்  சாதுவான சூர்யாவிடம் கிடைக்கிறது. அந்த பென்டிரைவ்வை  கைபற்ற நினைக்கும் ஒரு கும்பல் சூர்யாவை தாக்குகிறது. இந்த தாக்குதலில் சாதுவான சூர்யா இறந்துப் போகிறார். பிறகு உயிரோடு  இருக்கும் இன்னொரு சூர்யாவிடம் அந்த பென்டிரைவர் கிடைக்கிறது. அதை வைத்து சூர்யா என்ன செய்தார்? சூர்யாவின் அப்பா தயாரிக்கும் பால் பவுடரில் அப்படி என்ன இருக்கிறது? என்பதுதான் மீது கதை. ஓட்டிப் பிறந்த இரட்டையர்களாக வரும் அகிலன் விமலன் கதாபாத்திரங்களில் சூர்யா சும்மா பூந்து விளையாடியிருக்கிறார்”.  ஒட்டிப் பிறந்த இருவரும் நடனமாடுகிறார்கள், சண்டை போடுகிறார்கள். இந்த படத்துக்காக சூர்யா ரொம்பவும் சிரமப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது. ஒரு சூர்யா இறந்தவுடன், உயிரோடு இருக்கும் இன்னொரு சூரியா முதன்முதலில் தானாக நடக்கும் காட்சி ஒன்றே போதும், எந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று கூற. படம் பார்க்கும் நமக்கே ஒரு சூரியாவை மட்டும் பார்க்கும்போது, இன்னொரு சூரியாவை காணோமே என்று ஏங்க வைத்திருப்பது, இந்தப் படத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி. ஒளிப்பதிவு நம் கண்களுக்கு பெரிய விருந்தையே அளிக்கிறது. இந்தப் படத்தில் மிகவும் சிரமமான ஒன்று சண்டைக் காட்சிகளும் நடனக் காட்சிகளும் தான்.  சிறப்பாக நடித்த பெருமை சூர்யாவுக்கு போனாலும், அது நிறைவேறக் காரணமாக இருந்த பீட்டர் ஹெய்ன் மற்றும் நடன இயக்குனர்கள் பிருந்தாவும் தினேஷும் பாராட்டுக்குரியவர்கள்.  முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியை ரொம்பவும் இழுத்து, எப்ப தான் படம் முடியுமோ என்று என்ன வைக்கிறது.

ஆக மொத்தத்தில், இரு படங்களையுமே சூரியாவுக்காகவும்,பிரியாயமணிக்காகவும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment