Wednesday, July 18, 2012

நண்பரின் தன்னம்பிக்கையூட்டும் கவிதை

என்னோட மனப்பாரத்துக்கு அந்த  "நிம்மதி" கவிதை ஒரு வடிகாலாக அமைந்தது. ஆனால் அந்த கவிதையை படித்துவிட்டு நண்பர்கள்  வருத்தம் அடைந்ததினால், நண்பர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள் தன்னோட தன்னம்பிக்கையூட்டும் கவிதையை பதியுமாறு கேட்டுக் கொண்டார்.
நண்பர்களே! வாழ்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. திரு. அண்ணா சுந்தரத்தின் இந்த கவிதை உங்களுக்குள் ஒரு  தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்  என்ற நம்பிக்கையில் அந்த கவிதையை பதிக்கிறேன்.

நிம்மதியே! நீ என்னுள்
நீண்ட நாள் இருக்க
இறைவன் எனக்கு
தந்துவிட்டான் தெம்பினை!

இந்த உலகில் நீ
எங்கும் ஒளிய முடியாது
முடிந்தால் நிலவில்
ஒளிந்து பார்
உன்னை நான்
சந்திக்கிறேன்.

             -  அண்ணா சுந்தரம்

Monday, July 16, 2012

நிம்மதி

விடலைப் பருவத்தில்
நண்பனாக இருந்த
தந்தையை இழந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!

வாலிப வயதில்
குடும்பத்தின் பாரத்தை
தோள்களில் சுமந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!

திருமண வயதில்
திருமணத்தை முடித்து
குழந்தை செல்வத்துக்காக
பத்து வருடங்கள் காத்திருந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!

நடுத்தர வயதில்
நிம்மதியை கண்டுப்பிடித்து
விட்டேன் என்று நினைக்கையில்
என்னை செதுக்கி இந்த
நிலமைக்கு கொண்டுவந்து விட்ட
என் தெய்வம் என்னை
விட்டு நீங்கியதினால்
கிடைத்த அந்த நிம்மதியை
மீண்டும் தொலைத்தேன்!
 
இன்று என்னில்
சரிபாதியாக இருப்பவளுக்கு
கண்ணில் பிரச்சனை என்றால்
என்னோடு கூடப் பிறந்தவனுக்கோ
உடம்பில் பிரச்சனை
இப்படி பிரச்சனைகளையே
வாழ்கையில் பார்த்து
மரத்துப் போன மனது
கேட்கிறது,
உன்னால் நிம்மதியை
கண்டுப்பிடித்து வைத்துக்
கொள்ள முடியாதா
என்று!
அதற்கு புத்தி பதில்
கூறியது,
நிம்மதி ஆடும் கண்ணாம்பூச்சி
ஆட்டத்தில், உன்னால்
நிம்மதியை கண்டுப் பிடிக்க
முடிந்தாலும், அது உன்னை
விட்டு சீக்கிரம் மறைந்து விடும்
என்றாவது ஒரு நாள் அது
தன் தோல்வியை ஒப்புக்கொண்டு
உன்னிடம் தானாகவே அடைக்கலமாகும்
ஆனால் அப்போது உன்னால்
அதை அனுபவிக்க முடியாது
என்று!.


அமெரிக்காவில் அடியேன் – 3

நானும் நடந்து போயி விமானத்துக்கிட்ட போனேன். விமானம் இருக்கும்னு பார்த்தா, அங்க ஏதோ ஒரு வேன் மாதிரி சின்னதா ஒண்ணு நின்னுக்கிட்டு இருந்துச்சு. ஓ! இப்படியெல்லாம் கூட விமானம் இருக்கும்மான்னு ஒரே ஆச்சிரியமா போச்சு. இந்த டப்பா விமானத்தை பார்த்தவுடன், விமானத்து மேல இருந்த மதிப்பே போச்சு. அதுக்குள்ள ஏறுனவுடனே, இடது பக்கம் திரும்பி பார்த்தா வண்டிய ஓட்டுற டிரைவர் அண்ணாத்தை கண்ணுக்கு தெரிஞ்சாரு. என்னதான் வண்டி டப்பாவா இருந்தாக்கூட, இப்படி வண்டி ஒட்டுறவரை எல்லாம் பார்க்க முடியுதேன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம். ஆனாலும், விமானத்துக்குள்ள ஒரு வசதியும் இல்லை. பார்க்குறதுக்கு ஒரு வேன் மாதிரி இருந்தாலும்,நம்ம ஊர் வேன்ல இருக்கக்கூடிய வசதி கூட இல்லை. சீட்டை சாச்சுக்க கூட முடியலை. குத்த வச்ச பிள்ளையாராட்டம் உட்கார்ந்துக்கிட்டே போனேன். விமானத்தை எடுத்ததிலிருந்து, இறக்குற வரைக்கும் ஒரே கொர்ருன்னு” சத்தம் வேற. அமெரிக்காவில, உள்ளூர் விமானம் எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல. எப்படியோ ஒரு வழியா “san Jose”  வந்து சேர்ந்தேன். விமானத்தை விட்டு இறங்கினவுடனே சிட்னிலேருந்து வந்த இன்னொரு நண்பரை முதன் முதலா பார்த்தேன். ரெண்டு பேருமா பொட்டி எடுக்கிற இடத்துக்கு வந்தோம். பார்த்தா பொட்டி வந்த மாதிரியே தெரியலை. எனக்கு திருப்பியும் பயம் வந்துடுச்சு. ஆஹா! நம்ம பெட்டியை மாத்தி வேற விமானத்துல போட்டுட்டானுங்க போல இருக்கேன்னு நினைச்சேன். இப்படி ஏதாவது ஆகும்னு தெரிஞ்சு தான் சிட்னிலேருந்து கிளம்பும்போதே இன்சூரன்ஸ்க்கு தேவையான பேப்பர் எல்லாம் எடுத்து கைப்பொட்டில வச்சிருந்தேன். . நண்பர் அதுக்குள்ள அங்கிருந்த தகவல் மையத்துல போய் கேட்டாரு. அவுங்க நீங்க பெட்டி வர்றதுக்குள்ள வந்து பெட்டி எங்கன்னு கேட்டா நாங்க என்ன பண்றதுன்னு திருப்பி கேட்டாங்க. என்னடாது, நம்மலே ஆடி அசைஞ்சு அந்த விமான நிலையத்தை அனு அனுவா பார்த்துகிட்டு இவ்வளவு லேட்டா வரோம், இன்னமுமா பெட்டி வராம இருக்குன்னு ஒரே ஆச்சிரியமா இருந்துச்சு. கடைசில, நான் பயந்த மாதிரி எல்லாம் ஆகாம, என்னோட பெட்டி ரொம்ப சமர்த்தா என்கிட்ட வந்து சேர்ந்துச்சு. அப்புறம் நானும் அந்த நண்பரும் ஒரு டாக்ஸி பிடித்து ஹில்டன் ஹோட்டலுக்கு போனோம். நாங்க போனபோது மணி 11.30 தான் ஆச்சு. Check-in 3 மணிக்கு தான் போட்டிருந்துச்சு. 3 மணி வரைக்கும் ஹோட்டல் வாசல்ல உட்கார்ந்து கூர்கா வேலை தான் பார்க்க போறோம் நினைச்சோம். நல்ல வேளை, எங்களுக்கு எங்க அறையோட சாவியை கொடுத்துட்டாங்க. உடனே நண்பருக்க ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு, இந்த ஹோட்டல் சுமாரான ஹோட்டல்லா இருக்கும் போலன்னு சொன்னாரு. நான் உடனே, இது பெரிய ஸ்டார் ஹோட்டலுங்க, ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்துச்சுன்னு கேட்டேன். அதுக்கு அவரு 3மணி check-inனுக்கு, 11.30 மணிக்கெல்லாம் சாவியை கொடுத்துட்டாங்களே, கூட்டம் இல்லாததுனால தானே முடிஞ்சுது அப்ப இது சுமாரான ஹோட்டல் தானே அப்படின்னாரு. ஆஹா! ஒரு பெரிய கண்டுபிடிப்பை இல்ல கண்டுப்பிடிச்சிருக்காருன்னு நினைச்சுக்கிட்டு, ஏங்க நமக்கு வந்தவுடனே ரூம் கிடைச்சுதேன்னு சந்தோசப்படுவீங்களா, அதைவிட்டுட்டு இப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களேனேன்னு சொல்லி அவுங்க அவுங்க ரூமுக்கு போனோம். போயி நல்லா அசதி போக குளிச்சுட்டு கீழே வரவேற்பறைக்கு வந்தோம். பசி வேற வயித்தைக் கிள்ள ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல எங்க ஹோட்டல்னு கேட்டோம். பக்கத்துல தான் இருக்குனு சொன்னாங்க. சரின்னு நாங்களும் நடக்க ஆர்ம்பிச்சோம். நடந்தோம்,நடந்தோம், நடந்துக்கிட்டே இருந்தோம், ஹோட்டல் தான் வந்த பாடு இல்லை. நடக்கும்போது தான் தெரிஞ்சுது, அந்த இடம் ஒரு இண்டஸ்டிரியல் இடம்னு. நாங்களும் கிட்டதட்ட ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நடந்திருப்போம், ஒரு ஹோட்டல் கூட கண்ணுக்கு தென்படவேயில்லை. இங்க வேலை பார்க்கிறவுங்க எல்லாம் நம்மளை மாதிரி தினமும் சாப்பாட்டு மூட்டையை கட்டிக்கிட்டு வந்துடுவாங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன். கடைசியா ஒரு ஹோட்டலை கண்டுப்பிடிச்சோம். நாங்க போன நேரம் பஃப்பே நேரமாம், அதனால பீட்ஸா, பாஸ்தா இதெல்லாம் ஏழரை டாலருக்கு எவ்வளவு வேனாலும் சாப்பிடலாம்னு சொன்னாங்க. ஆஹா! புண்ணியவானுங்க, நம்ம பசி அறிஞ்சு நமக்கு ரொம்ப செலவில்லாம சாப்பாடு போடுறானுங்கன்னு நினைச்சுக்கிட்டு, எல்லாத்தையும் வெளுத்துக் கட்டினோம். கடைசில பில்லு போடுற எடத்துல பார்த்தா எட்டரை டாலர்னு சொன்னாங்க.  ஏழரைன்னு சொன்னிங்க, சாப்பிட்டதுக்கப்புறம் விலையை கூட்டி சொல்றீங்கன்னு கேட்டா, நாங்க எல்லாத்துலையும் வெளிப்படையா இருப்போம். விலைல கூட, விலை தனியா, வரி தனியான்னு போடுவோம்ன்னு சொன்னாங்க. அடப்பாவிகளா! எல்லாத்தையும் ஒரே விலையா பார்த்து பழகிப் போன எங்களுக்கு இது ரொம்ப பெரிய கஷ்டமா இருக்குமேன்னு நினைச்சு, பில்லை கட்டிட்டு, திருப்பியும் சாப்பிட்ட சாப்பாடு எல்லாம் செறிச்சிடுற அளவுக்கு திரும்பி ஹோட்டலுக்கு நடந்தோம்.
எங்களுக்கு மறு நாள் மாலையிலிருந்து தான் கல்வி மாநாடு. மறு நாள் என்ன பண்னினேன்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                               பகுதி-4

Wednesday, July 4, 2012

அமெரிக்காவில் அடியேன் - 2

 
நானும் லாஸ் எஞ்செல்ஸ் போற விமானத்துல ஏறி உட்கார்ந்தேன். இந்த விமானத்துல சைவ சாப்பாடு வாய்க்கே விளங்கலை.ஒரு சின்ன கரண்டி அளவு வெள்ளை சாதமும், இல்ல! இல்ல! பொங்க சாதமும்!! (அந்த அளவுக்கு குழஞ்சு இருந்துச்சு), வேகவச்ச இரண்டு,மூன்று மஷ்ரூமும்,கொஞ்சம் கீரையும் கொடுத்தாங்க.எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டேன். இன்னும் இரண்டு நேரத்துக்கு, இதையேத்தான் கொடுக்கப் போறாங்களோன்னு பயம் வந்துடுச்சு. ஆனா, இதையே கொடுக்காம, ஏதோ தம்மாத்துண்டு பர்கர் கொடுத்தாங்க(எப்படித்தான் அவ்வளவு சின்னதா பர்கர் செய்வாங்களோ!!). அதை மட்டும் கொஞ்சம் திருப்தியா சாப்பிட்டு, எப்படியோ 13 மணி நேரத்தை அந்த விமானத்துல ஒப்பேத்தி லாஸ் எஞ்செல்ஸ் விமான நிலயத்துக்கு வந்து சேர்ந்தேன்.அங்கேயும் குடியுரிமைத் துறையில இருக்கிற ஒரு அம்மா தான்,எனக்கு அமெரிக்காவில 6 மாசம் வரைக்கும் தங்குறதுக்கு அனுமதி தந்தாங்க.அதுக்கப்புறம் என்னோட ஒரே ஒரு பெரிய பெட்டியை எடுத்துக்கிட்டு, வலது பக்கம் திரும்பினவுடனே, என் பெட்டில ஒட்டியிருந்த ஸ்டிக்கரைப் பார்த்து, இங்கேயே அந்த பெட்டிய போடுங்கன்னு சொன்னாங்க. என்னை மாதிரியே மற்ற ஊர்களுக்கு போறவங்களையும் அங்கேயே அவுங்க பெட்டியை எல்லாம் போடச் சொன்னாங்க. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு., இவுங்க நம்ம பெட்டியை “san jose” போற விமானத்துல ஏத்தாம வேற விமானத்துல ஏத்திட்டா என்ன பண்றது. சரி, பெட்டி போனா போகட்டும், அதுக்குள்ள தங்கமும்,வெள்ளியுமா இருக்குது!!!. அந்த பெட்டிக்குள்ள இன்னொரு சின்ன பெட்டியும்(hand baggage பெட்டி) அந்த சின்ன பெட்டிக்குள்ள ஏழெட்டு சட்டை, பேன்ட் தான் இருக்குது. இதுக்கு போயி நாம ஏன் கவலை படனும்னு மனசை தேத்திக்கிட்ட போதுதான், மூளைக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுது.என்னன்னா!அந்த பெட்டிக்குள்ள இரண்டு சட்டை பேன்ட் புதுசா வச்சிருந்தேன் அந்த இரண்டும் மாமனார் வீட்டுல கொடுத்தது. அதுல ஒரு சட்டை பேன்டைத்தான் நான் கட்டுரையை வாசிக்கிற அன்னைக்கு போட்டுக்கனும்னு வீட்டு அம்மணியோட உத்தரவு. பெட்டி மட்டும் வராம போகட்டும் அப்புறம் வச்சுக்கிறேன் கச்சேரியைன்னு மனசுக்குள்ள அந்த உத்தரவு மிருதங்கம் வாசிச்சது. கண்டிப்பா பெட்டி கிடைச்சிடுங்கிற நம்பிக்கைல அடுத்த விமானம் எங்க நிக்கும்னு போர்டிங் பாஸ்ல பார்த்து 65A கேட்டுக்கு வழியை தேடிக்கிட்டு போனேன்.சரி, எதுக்கும் மேல இருக்கிற டி‌வி பொட்டில ஒரு தடவை பார்த்துடலாம்னு பார்த்தா, அதுல கேட் 66ன்னு காட்டுனுச்சு. திருப்பியும் 66கேட்டை தேடி கண்டுப் பிடிச்சு போனேன். அப்பவே காலைல 8மணியாயிடுச்சு. 9.20க்கு அந்த விமானம்,அதனால 8.50க்கு எல்லாம் போர்டிங் பண்ணனும்னு சொல்லியிருந்தாங்க.நானும் கேட்-66ல போயி உட்கார்ந்து, எனக்கு ரொம்ப பிடிச்ச இளையராஜா பாடல்களை கேட்டுக்கிட்டு இருந்தேன். மணியோ 9மணியாயிடுச்சு,அந்த கேட்ல கூட்டத்தையும் காணோம், அந்த விமானத்துல வேலை பார்க்குறவங்களையும் காணோம். எனக்கு ஒரே குழப்பமா போச்சு. மறுபடியும் அங்கேயே இருக்கிற டி‌வி பொட்டில போயி பார்த்தேன். அது கேட்-66ன்னு தான் காட்டிக்கிட்டு இருந்துச்சு. என்னடா இது ஒண்ணுமே புரியலையேன்னு யோசிச்சு,அங்க இருக்கிற தகவல் நிலையத்துல போயி ஏங்க, இந்த மாதிரி “san jose” போற விமானம் எந்த கேட்ல நிக்குதுன்னு கேட்டேன். கவுண்ட்டர்ல இருக்கிற அம்மாவுக்கு நான் பேசுன ஆங்கிலம் புரியல போல இருக்கு, அவுங்க திருப்பி என்ன கேட்டீங்கன்னு, கேட்டாங்க.மறுபடியும் நான் கேட்டதையே திருப்பி சொன்னேன். அவுங்க “san jose”, அந்த மாதிரி எந்த ஊரும் இல்லையேன்னு சொன்னாங்க.நானும் “san joseயைவேற விதமா எல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒண்ணும் வேலைக்கு ஆகலை. மணியோ 9.05ஆயிடுச்சு. இனிமே இவுங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாதுன்னு முடிவு பண்ணி, நான் என்னோட போர்டிங் பாஸை எடுத்துக் காமிச்சு சைகை பாஷைல எப்படி போகனும்னு கேட்டேன்.உடனே, அந்த அம்மாவும், ஓ! சேன் உஸேவாஅது கேட்-64Aன்னு சொன்னாங்க. எனக்கு ஒரே சந்தேகம் “san joseன்னுஎழுதுறாங்க, ஆனா சொல்றதை மட்டும் என்னமோசேன் உஸேன்னுசொல்றாங்களேன்னு. (அந்த ஊருக்கு போனப்புறம் தான் ஏன் அப்படி சொல்றாங்கன்னு தெரிஞ்சுது). திருப்பியும் அந்த சந்தேகத்தை கேட்டு, அவுங்களுக்கு அதை புரிய வச்சு முடிக்கிறதுக்குள்ள, விமானம் போயிடும்னு முடிவு பண்ணி, அந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ற வேலையை விட்டுட்டேன்.ஆனா ஏன் இப்படி தாப்பா டி‌வி பொட்டில காட்டுறாங்கன்னு அவுங்க கிட்ட கேட்டேன். அந்த அம்மாவும் ஓ!அதை மாத்தலை போல இருக்குன்னு ரொம்பவும் அசால்டா சொன்னாங்க. அட!கஷ்டமே, இதை நம்பி இருந்தா, நாம அந்த விமானத்தை விட்டிருப்போமேன்னு வேக வேகமா கேட்-64A எங்க இருக்குதுன்னு தேடிக்கிட்டே போனேன், போனேன்,போயிக்கிட்டே இருந்தேன். ஒரு பெரிய சுத்து சுத்தி, ஒரு வழியா அந்த கேட்டுக்கு வந்து சேர்ந்தேன். நல்ல வேளையா, அப்பத்தான் எல்லோரும் வரிசைல நின்னு போர்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நானும் போயி அந்த வரிசைல நின்னேன். அப்ப ஒரு அறிவிப்பு செஞ்சாங்க. அதாவது,கைப் பெட்டி பெருசா இருந்தா, அதை விமானத்துக்குள்ள வைக்க முடியாது, அதனால விமானம் ஏறுவதற்கு முன்னாடி அங்க நிக்கிறவங்ககிட்ட கொடுத்துடுங்க, அவுங்க ஒரு ரசீது கொடுப்பங்க. இறங்கும்போது, நீங்க உங்க பெட்டியை வாங்கிக்கலாம்னு சொன்னாங்க. நான் வெறும் கம்ப்யூட்டர் பையை வச்சிருந்ததுனால, எனக்கு அந்த பிரிச்சனை இல்லாம போச்சு. என்னோட போர்டிங் பாசை சரி பார்த்த பிறகு, நடந்து போயி விமானத்துக்குள்ள ஏறச் சொன்னாங்க. நடந்து போயி விமானத்துக்கிட்ட போனவுடனே, எனக்கு ஒரே ஆச்சிரியமாகவும்,அதிர்ச்சியாகவும் போயிடுச்சு. ஏன் எனக்கு அப்படி ஆச்சுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                               பகுதி-3